புழல்: சென்னை புழல் என்.எஸ்.கே.தெருவைச் சேர்ந்தவர் ரிதம், 24; தனியார் ஊழியர். இவருக்கு, சில மாதங்களுக்கு முன் தான் திருமணமானது.
இவர் நண்பரான, திருவள்ளுவர் தெருவை சேர்ந்த விஜய், 26, என்பவருடன், நேற்று மாலை 7:00 மணியளவில், புழல் லட்சுமி அம்மன் கோவில், 4வது தெருவில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, 3 இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பல், ரிதத்தை சரமாரியாக வெட்டினர். தடுக்க முயன்ற விஜயையும் வெட்டினர்.
இருவரையும் புழல் போலீசார், ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியில் ரிதம் உயிரிழந்தார். விஜய் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த மாதம், இதே பகுதியை சேர்ந்த சூர்யா என்பவரிடம் ஏற்பட்ட மோதல் காரணமாக, அவரது நண்பர்கள் வெட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.