உளுந்தூர்பேட்டை, : உளுந்துார்பேட்டையில் முன்விரோத தகராறில் இரண்டு போலீஸ்காரர்களின் மண்டை உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
உளுந்துார்பேட்டை நகராட்சி கார்த்திகேயன் நகரை சேர்ந்தவர் முரளி, 37. கடலூர் மாவட்டம் திட்டக்குடி போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது சகோதரர் முகுந்தன், 35. இவர், சீர்காழி போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவரும் நேற்று இரவு 8.௦௦ மணியளவில் வீட்டில் இருந்தனர்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கொத்தனார் சீனிவாசன்,37, குடும்பத்தினருக்கும், முரளி குடும்பத்தினருக்கும் இடையே முன் விரோதத்தில் தகராறு ஏற்பட்டது.
தகராறு முற்றவே இரு தரப்பினரும் ஆபாசமாக திட்டி தாக்கிக் கொண்டனர். இதில் போலீஸ்காரர்கள் முரளி, முகுந்தன் ஆகியோரின் மண்டை உடைந்தது. மேலும், தேவராஜ் மனைவி அமுதா, 62, முரளி மனைவி சுந்தரி,34, சீனிவாசன், ஆனந்தராஜ் மனைவி மங்கை,35, ஆகியோரும் படுகாயமடைந்தனர்.
அனைவரும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மோதல் குறித்து உளுந்துார்பேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.