சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரி வாகனங்களுக்கு கொரோனா
காலத்தில் விலக்கு அளிக்கப்பட்ட வரி விதிப்பு குறித்து வட்டார போக்குவரத்து
அலுவலகம் அதனை ஆன் லைனில் பதிவேற்றம் செய்து வரி விலக்கு விபரங்களை
குறிப்பிட்டு தள்ளுபடி செய்வதற்கு இழுத்தடிப்பு செய்வதாக புகார்
எழுந்துள்ளது.
இம்மாவட்டத்தில் பள்ளிகளில்203, கல்லுாரிகளில் 150 வாகனங்கள் ஓடுகின்றன. கொரோனா காலத்தில் இந்த வாகனங்கள் ஓடவில்லை.
அக்கால கட்டத்தில் ஓடாத பள்ளி, கல்லுாரி வாகனங்களுக்கு வரிவிலக்கு வழங்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி 2020 ஏப்.,முதல் 2021 அக்., வரை வரிவிலக்கு அளிக்க வேண்டும். இதன் விபரங்களை ஆன்லைனில் பதிவேற்றி வரி விலக்கு குறித்த விபரங்களை குறிப்பிட்டு ஆர்.டி.ஓ.,விடம் சான்று பெற்று வழங்க வேண்டும். அதன்பிறகே வரி, பெர்மிட் புதுப்பிக்கப்படும்.
வரிவிலக்கு செய்யப்படாததால், பெர்மிட்டிற்காக ஏராளமான பள்ளி, கல்லுாரி வாகனங்கள் காத்திருக்கின்றன.
இது குறித்து சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன் கூறியதாவது, பள்ளி, கல்லுாரி வாகனங்கள் அக்கால கட்டத்திற்கான வரிவிலக்கு கோரி விண்ணப்பித்திருக்க வேண்டும். அப்படி விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பள்ளி, கல்லுாரி வாகனங்கள் இந்த சலுகையை பெற்றுவிட்டனர், என்றார்.