விக்கிரவாண்டி, : விக்கிரவாண்டி அடுத்த ஆசூர் கிராமத்தில் மாசி மகத்தையொட்டி அங்காளம்மன் கோவிலில் போலீஸ் பாதுகாப்புடன் மயானக் கொள்ளை உற்சவம் நடந்தது.
விக்கிரவாண்டி அடுத்த ஆசூர் அங்காளம்மன் கோவிலில் மாசி மாதத்தில் நடைபெறும் தேர் திருவிழா மற்றும் மயானக் கொள்ளை நேற்று நடந்தது. உற்சவத்திற்கு, ஒரு சமுதாய மக்களை கோவிலுக்குள் அனுமதிக்க மறுப்பு தெரிவிப்பதாக இரு தினங்களுக்கு முன் கலெக்டருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இரு தரப்பினரையும் அழைத்து பேச கலெக்டர் பழனி உத்தரவிட்டார்.
அதன்படி, நேற்று காலை விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் இரு தரப்பைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற அமைதிக்குழு கூட்டம் நடந்தது.
ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். தாசில்தார் ஆதிசக்தி சிவக்குமரி மன்னன், டி.எஸ்.பி., பார்த்திபன் முன்னிலை வகித்தனர். மண்டல துணை தாசில்தார் பாரதிதாசன், வருவாய் ஆய்வாளர் தெய்வீகன், வி.ஏ.ஓ., முருகன், ஊராட்சி தலைவர் ஞானசேகரன் மற்றும் இரு தரப்பைச் சேர்ந்த கிராம முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், கிராமத்தில் உள்ள அனைத்து சமுதாயத்தினரால் திருவிழா நடத்தப்படுகிறது. கருத்து வேற்றுமை இல்லை என இரு தரப்பு கிராம முக்கியஸ்தர்கள் முன்னிலையில் பேசி முடிவு செய்யப்பட்டது. கூட்டத்திற்கு பிறகு ஆசூர் கிராமத்தில் எஸ்.பி., ஸ்ரீநாதா, ஏ.டி.எஸ்.பி., தேவராசு, மற்றும் வருவாய்த்துறையினர் கிராமத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.
அதனைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று மாலை 10ம் நாள் தேர் திருவிழா மற்றும் மயானக் கொள்ளை உற்சவம் நடந்தது.