சோழவந்தான் : செல்லம்பட்டி ஒன்றியம் சக்கரப்பநாயக்கனுார் ஊராட்சி கோழிப்பட்டியில் கழிவுநீர் வாய்க்கால், குடிநீர், அங்கன்வாடி மையம் உள்ளிட்ட வசதிகளின்றி மக்கள் பரிதவிக்கின்றனர்.
இவ்வூரில் குறைவான மக்கள் தொகையே உள்ளது. இங்குள்ள தரைமட்ட குடிநீர் தொட்டியில் ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் தேக்குகின்றனர். இதில் பைப் லைன் சேதமாகி விட்டதால் குடிநீர் விநியோகம் செய்ய காலதாமதம் ஏற்படுகிறது.
இங்குள்ள ஒரேயொரு தெருவிலும் முறையான கழிவுநீர் வாய்க்கால் அமைக்காமல் கிடப்பில் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் குளம் போல் தேங்குகிறது. வீடுகளின் கழிவுநீர் வழிந்தோட வழியின்றி வீதி, கால்வாயில் தேங்குகிறது. அதில் கொசு உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.
அப்பகுதி இராஜங்கம் கூறியதாவது:
இங்குள்ளோருக்கு அரசின் திட்டங்கள் எதுவும் கிடைப்பதில்லை. இங்கு பைப்லைன் சேதமானதால் 7 மாதங்களாக குடிநீர் தொட்டி நிரம்ப தாமதமாகிறது. கழிவுநீர் வாய்க்கால் குளறுபடியால் துர்நாற்றம் வீசுகிறது.
இங்கு குழந்தைகள் படிக்கும் அங்கன்வாடி மையம் இல்லை. இதற்காக 2 கி.மீ., தொலைவில் உள்ள சக்கரப்பநாயக்கனூர் செல்கின்றனர்.
பொது சுகாதார வளாகம் இல்லாததால், ரோட்டோரம் திறந்தவெளி கழிப்பறையாக பயன்படுத்துகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குறைகளை சரிசெய்ய ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் பலனில்லை. குறைகளை தீர்க்க கலெக்டர் அனீஷ்சேகர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.