மதுரை : ''விண்வெளி பயிற்சிக்கு வரும் தமிழக மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது'' என, விண்வெளி ஆய்வு மையமான 'இஸ்ரோ' அமைப்பின் முன்னாள் தலைவர் சிவன், விஞ்ஞானி சிவசுப்ரமணியன் கூறினர்.
மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன், முன்னாள் விஞ்ஞானி சிவசுப்பிரமணியன் கூறியதாவது:
பல்வேறு மாநிலங்களில் இருந்து 'யுவிகா' என்ற நிகழ்ச்சி மூலம் அறிவியல் ஆர்வமுள்ள மாணவர்களை தேர்ந்தெடுத்து பயிற்சி அளிக்கின்றனர். விண்வெளி ஆராய்ச்சியில் நடக்கும் செயல்பாடுகள் குறித்து விளக்கப்படுகிறது. பின்னர் தேர்வுகள் நடத்தி 'இந்தியன் ஸ்பேஸ் டெக்னாலஜி' கல்லுாரியில் படிக்க தேர்வு செய்கின்றனர்.
அவர்களுக்கு நான்காண்டு கல்லுாரி படிப்புக்கான கட்டணம், விடுதி, புத்தகங்கள் என அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கின்றனர். படிப்பு முடிந்தவுடன் 85 சதவீதம் மாணவர்களை இஸ்ரோ தேர்ந்தெடுத்துக்கொள்ளும். பல மாநிலங்களில் இருந்தும் இதில் பங்கேற்கின்றனர். ஆனால் தமிழகத்தில் இருந்து குறைந்த அளவிலேயே வருகின்றனர். பிற மாநிலங்களில் நிறைய பயிற்சி நிறுவனங்கள் உள்ளதால் அவர்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. அது தமிழ்நாட்டில் குறைவு. முன்பு மதுரையில் 'ஏரோ ஸ்பேஸ் பார்க்' கொண்டுவர வேண்டும் என்ற திட்டம் இருந்தது. மதுரைக்கு இது வந்தால் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.
டிஜிட்டல் முறையில் ராக்கெட், செயற்கை கோள்களை எவ்வாறு உருவாக்கலாம் என்பதை அறியும் வகையில் இந்த பார்க் அமையும். நாங்கள் இஸ்ரோவில் சேர்ந்தபோது தமிழர்கள் 40 சதவீதம் பேர் அங்கு இருந்தனர். தற்போது குறைந்துவிட்டனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.