வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை-சென்னையில் ஒப்பந்த அடிப்படையில், 1,000 தனியார் பஸ்களின் சேவைக்கு அனுமதி வழங்க, மாநகர போக்குவரத்துக் கழகமான எம்.டி.சி., முடிவு செய்துள்ளது. இதற்கான நிறுவனங்களை தேர்வு செய்யும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டு உள்ளன.
![]()
|
தமிழகத்தின் பிற நகரங்களில் தனியார் பஸ் சேவைக்கு அரசு அனுமதி அளித்திருந்தாலும், சென்னையில், அரசின் பொதுத்துறை நிறுவனமான மாநகர் போக்குவரத்துக் கழகம் மட்டுமே பஸ்களை இயக்கி வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, 625 வழித்தடங்களில், 3,436 பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும், 30 லட்சம் மக்கள் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றனர். சாதாரணம், விரைவு, சொகுசு, குளிர்சாதன வசதி உள்ளவை என, பஸ்கள் இயக்கப்படுகின்றன.
சென்னையில் 'மெட்ரோ' ரயில் சேவை துவங்கியபின், பொது போக்குவரத்து சேவையை ஒருங்கிணைக்க, சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தனியார் பஸ்சேவைக்கும் அனுமதி அளிக்க, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
முதற்கட்டமாக, 500 பஸ்; இரண்டாம் கட்டமாக, 500 பஸ் என மொத்தம், 1,000 பஸ் இயக்க, தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.
கி.மீ., அடிப்படையில் வருவாய், செலவு கணக்கிடப்பட்டு, இதற்கான தொகை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட உள்ளது.
பஸ்களை இயக்குவதற்காக, தனியார் நிறுவனங்களிடம் விண்ணப்பங்கள் பெறும் பணிகள், ஒரு மாதமாக நடந்து வருகின்றன. உலக வங்கி பரிந்துரை அடிப்படையில், இத்திட்டத்தை செயல்படுத்தப் போவதாக, போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் ஒரு வித சலிப்புடன் மாநகர பஸ்களில் பயணித்த மக்களுக்கு, தனியார் பஸ்களுக்கு அனுமதி என்ற அறிவிப்பு, மகிழ்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது. சிறந்த சேவை கிடைக்கும் என்பதால், சமூக ஆர்வலர்களும் வரவேற்றுள்ளனர்.
![]()
|
அதே நேரம், வேலை வாய்ப்பு பறிபோகுமோ என்ற அச்சம் காரணமாக, தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சில தொழிற்சங்கங்கள் போராடப் போவதாகவும் அறிவித்துள்ளன.
தமிழகத்தில், 1970ம் ஆண்டுக்கு முன், குறிப்பிட்ட சில தனியார் நிறுவனங்களால் பஸ்கள் இயக்கப்பட்டன.சென்னையிலும், வெளியூர்களுக்கும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. இதன்பின், 1971 ஜூனில் பஸ்கள் உச்சவரம்பு சட்டம் வாயிலாக, பெரிய நிறுவனங்கள் அரசுடைமை ஆக்கப்பட்டன.இதன் அடிப்படையில், 1972ம் ஆண்டு முதல், அரசு நிறுவனங்களான போக்குவரத்து கழகங்கள் வாயிலாக, பஸ் சேவைகள் வழங்கப்படுகின்றன.சென்னை தவிர்த்து, பிற நகரங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தனியார் நிறுவனங்கள் பஸ்களை இயக்கி வருகின்றன.இதன் அடிப்படையில், 50 ஆண்டுகளுக்குப்பின், சென்னையில் தனியார் பஸ் சேவைக்கான திட்டத்தை, மாநகர் போக்குவரத்துக் கழகம், புதிய வடிவில் செயல்படுத்த உள்ளது.