புதுடில்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான மணீஷ் சிசோடியாவை மார்ச் 20 வரை திகார் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

டில்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், டில்லி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கோர்ட் உத்தரவுப்படி சிபிஐ அதிகாரிகள் காவலில் எடுத்து, மணீஷ் சிசோடியாவை விசாரித்தனர். தொடர்ந்து அவர் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

விசாரணை முடிந்த நிலையில் இன்று( மார்ச் 06) மணீஷ் சிசோடியா டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அப்போது மார்ச் 20 வரை சிசோடியாவை திகார் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
தொடர்ந்து, சிறப்பு நீதிபதி நாக்பால் கூறும்போது, சிசோடியா தனக்கு தேவையான மருந்துகளை உடன் எடுத்து செல்லவும் அனுமதி அளிக்கப்படுகிறது.
தியானம் செய்யும் அறையில் தன்னை வைத்திருக்க வேண்டும் என சிசோடியா தரப்பில் விடுத்த வேண்டுகோளை, சிறை கண்காணிப்பாளர் பரிசீலனை செய்யும் படியும் நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.