
ஹோலி, தீபாவளி, ரக்சாபந்தன் போன்ற பண்டிகைகளில் விதவைகள் பங்கேற்க முடியாது என்ற பழங்கால இழிவை உடைக்கும் வகையில் சுலப் இண்டர்நேஷனல் அமைப்பானது விதவைகளைக் கொண்டு ஹோலி பண்டிகையை கொண்டியது.
தற்போது வடமாநிலங்களில்ஹோலி பண்டிகை நடந்து வருகிறது. அங்குள்ள மக்களுக்கு ஹோலி என்பது முக்கிய பண்டிகையாகும். மிக மகிழ்ச்சியாக இருக்கும் தருணமாக இந்த பண்டிகை நாட்களை கருதுவர். இந்த மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் அங்குள்ள விதவைப் பெண்களுக்கு பல காலமாக மறுக்கப்பட்டு வந்தது.

இது அவர்களை அவமதித்து மேலும் மேலும் அவர்களின் மனதை புண்படுத்தும் செயலாகும் என்பதை உணர்ந்த சுலப் சமூக நிறுவனமானது, அவர்களை ஒருங்கிணைத்து இன்று அவர்களைக் கொண்டு ஹோலி பண்டிகையை குதுாகலமாக கொண்டாடியது.
இதற்காக உ.பி.,மதுராவில் உள்ள ராதா கோபிநாத் கோயில் பல்வேறு விதமான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. காலையில் நடைபெற்ற விழாவில் விதவைகள் மட்டுமின்றி கணவரால் கைவிடப்பட்டவர்கள், திருமணம் ஆகாமல் தனிமையில் இருக்கும் பெண்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ஹோலி பண்டிகை கொண்டாடிய இந்த விதவைகள் சுயமாக நிற்பதற்காக பல்வேறு சிறு தொழில்களையும் செய்து வருகின்றனர். இவர்கள் தயார் செய்யும் ரக்சாபந்தனைத்தான் ஒவ்வொரு வருடமும் பிரதமர் மோடி கையில் கட்டிக்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மதுராவில் நடைபெற்ற ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் இந்த வருடம் இவர்களது ஹோலி பண்டிகை கொண்டாட்டமே பார்வையாளர்களால் முக்கியத்துவம் கொடுத்து வரவேற்கப்பட்டது,நியாயந்தானே!
-எல்.முருகராஜ்