மார்ச் 7, 1990
சிவகங்கை அருகேயுள்ள பனையூரில், ஜடாதரய்யர் - காமாட்சி தம்பதிக்கு மகனாக, 1897 மே, 11ல் பிறந்தவர் வேங்கடசுப்பிரமணியன் என்ற, சுத்தானந்த பாரதியார்.
திண்ணை பள்ளியில் படித்த இவர், எட்டாவது வயதிலேயே கவிதை எழுதினார். இமயமலை சித்தர், இவருக்கு, 'சுத்தானந்தம்' என்ற பெயர் சூட்டி, தீட்சை வழங்கினார். சிருங்கேரி சங்கராச்சாரியார், இவருக்கு, 'பாரதி' என்று பட்டம் சூட்டினார். வேதங்கள், உபநிஷத்துகள், பிரம்ம சூத்திரம் உள்ளிட்டவற்றையும், பல மொழி இலக்கியங்களையும் கற்று, அவற்றை தமிழில் மொழி பெயர்த்தார்.
இவரின், 'யோகசித்தி, கீர்த்தனாஞ்சலி, மேளராகமாலை' உள்ளிட்ட கவிதை நுால்கள் பிரபலமடைந்தன. திருக்குறளை இரண்டடியிலேயே, ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, சென்னை உலகத் தமிழ் மாநாட்டில் வெளியிட்டார். தமிழ் பல்கலையின் ராஜராஜன் விருதை முதலில் பெற்ற இவர், 1990ல், இதே நாளில், தன், 9௨வது வயதில் மறைந்தார்.
சமய ஒற்றுமைக்காக, புதுச்சேரி ஆசிரமத்தில், 20 ஆண்டுகள் மவுனவிரதம் இருந்த யோகியின் சித்தி தினம் இன்று!