சூலூர்:சூலூர், கருமத்தம்பட்டி, சுல்தான்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களை சந்தித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
கருமத்தம்பட்டி, சூலூர், சுல்தான்பேட்டை பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. இவற்றில், வட மாநிலங்களை சேர்ந்த பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோக்களால் தொழிலாளர்கள் அச்சமடைந்தனர். சொந்த ஊரில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அடிக்கடி போனில் நலம் விசாரிக்கின்றனர். அச்சத்தில் உள்ள பெற்றோர், தொழிலாளர்கள் ஊருக்கு வந்து விடும்படி வற்புறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தொழிலாளர்களிடையே அச்சத்தை போக்கவும், அவர்களின் பாதுகாப்புக்கு உறுதி அளிக்கும் விதமாக, பல தொழில்நிறுவனங்களுக்கு சென்று, நேரடியாக தொழிலாளர்களை சந்தித்து, சூலூர், கருமத்தம்பட்டி, சுல்தான்பேட்டை போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில்,' வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அந்தந்த நிறுவனங்களின் அதிகாரிகளிடம் அறிவுறுத்தி வருகிறோம். வதந்திகளை நம்ப வேண்டாம். சிறு பிரச்னை என்றாலும் போலீசாருக்கு தகவல் அளிக்க அறிவுறுத்தி உள்ளோம்' என்றனர்.