மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையத்தில், ஒரு கோடியே, 87 லட்சம் ரூபாய் செலவில், கட்டப்பட்டு வரும் அறிவு சார் மையத்திற்கு, கட்டுமான அறிவிப்பு விளம்பர பலகை ஏதும் வைக்கப்படாதது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
மேட்டுப்பாளையம் நகரில், மணி நகர் உயர்நிலைப்பள்ளி எதிரே, கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஒரு கோடியே, 87 லட்சத்து, 39 ஆயிரம் ரூபாய் செலவில், அறிவு சார் மையம் (நூலகம்)கட்டும் பணிகள் நடக்கின்றன.
இதில் பெரியவர்கள், சிறுவர்கள், பெண்கள் ஆகியோர், தனித்தனியாக அமர்ந்து படிக்கும் வகையில் கட்டடங்கள் கட்டும் பணிகள் நடைபெறுகின்றன. இங்கு கதை, கவிதை, புத்தகங்களும், போட்டி தேர்வுக்கான புத்தகங்களும் வைக்க அறைகள் கட்டப்பட உள்ளன.
பொதுவாக, ஒவ்வொரு திட்டப் பணிகள் நடைபெறும் இடங்களில், எந்தத் திட்டத்தில், என்னென்ன பணிகள் நடைபெறுகின்றன. திட்ட மதிப்பீடு எவ்வளவு, வேலை தொடங்கிய நாள், முடிக்கும் நாள் என, அனைத்து விபரங்கள் அடங்கிய விளம்பரப் பலகை, வைப்பது வழக்கம்.
ஆனால் மேட்டுப்பாளையம் மணி நகரில், கட்டப்பட்டு வரும், அறிவு சார் மையம் கட்டும் பணிகள் நடைபெறும் இடத்தில், எவ்வித அறிவிப்பு பலகையும் வைக்கவில்லை.
இது நகராட்சி நிர்வாகம் கட்டுகிறதா, அல்லது தனியார் கட்டடம் கட்டுகிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அதனால் நகராட்சி நிர்வாகம், உடனடியாக திட்டப் பணிக்கான அறிவிப்பு பலகையை வைக்க வேண்டும், என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.