விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகள் மூன்று போகமும் ஒரே சாகுபடி செய்யும் முறையை மாற்றி, மாற்றுப் பயிர் செய்து மண் வளம் பெறவும், வருவாய் ஈட்டவும் வேண்டும் என வேளாண் அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து மூன்று போகமும் நெல், சவுக்கு, மரவள்ளி போன்றவற்றை விவசாயிகள் தொடர்ந்து பயிரிட்டு வருகின்றனர். ஒரே பயிர் செய்வதால் மண் வளம் பாதிப்பதோடு, நிலத்தில் சரி விகித சத்து கிடைக்காமல் மகசூல் பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது.
இதற்கு மாற்றுப் பயிர் அவசியம் என நீண்டகாலமாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், விவசாயிகள் பலர் நெல் போன்ற பயிர்களையே தொடர்ச்சியாக மே ற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக கடந்த சம்பா பருவத்தில், மாவட்டத்தில் 71 ஆயிரத்து 250 எக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. அறுவடை செய்யப்பட்டு வரும் நிலையில், பெரும்பாலான விவசாயிகள் அடுத்து, நவரை பருவத்தில் நெல் நாற்று விடுவதை துவங்கி விட்டனர்.
இதனைத் தவிர்த்து, மூன்றாம் போகத்தில் உளுந்து போன்ற மாற்று பயிர் சாகுபடி செய்தால் மிகுந்த பலன்பெறலாம். அதனால், மண்ணில் தழைச்சத்தை நிலைப்படுத்தி அங்கக கரிம சேர்ப்பு மூலம், மண்ணின் அமைப்பை மேம்படுத்தி, சத்துக்களை திரட்டுவதுடன், மகசூலில் லாபம் பெறலாம் என வேளாண் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, விழுப்புரம் வேளாண் இணை இயக்குனர் கணேசன் கூறியதாவது:
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாத நெல் அறுவடைக்குப்பின், அனைத்து விவசாயிகளும் உளுந்து சாகுபடி செய்யவே அறிவுறுத்தப்படுகிறது.
இதற்காக மாவட்டத்தில் 30 ஆயிரத்து 750 ஏக்கர் பரப்பளவில் பயிரிட 246 மெட்ரிக் டன் உளுந்து விதைகள் தேவைப்படுகிறது. இதற்கு, முதல் கட்டமாக 1.23 கோடி ரூபாயில் விதை மானியம், விழுப்புரம் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. தற்சமயம் உளுந்து விதைகளான வம்பன்-8 ரகம் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு, 50 சதவீதம் மானிய விலையில், அதிகபட்சமாக ஏக்கருக்கு 8 கிலோவிற்கு 400 ரூபாய் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், விவசாயிகள் தொடர்ந்து நெல் சாகுபடி செய்வதால், நெல் மகசூல் குறைவதுடன் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் சம்பா அறுவடைக்குப்பின் குறைந்த அளவில் நீரை பயன்படுத்தி உளுந்து விதைக்கலாம்.
ஏக்கருக்கு 8 கிலோ உளுந்து விதைப்பு செய்தால் போதும். மேலும், விதைப்பு செய்த 25 மற்றும் 35ம் நாட்களில் இலை வழியாக 2 சதவீதம் டை அம்மோனியம் பாஸ்பேட் கரைசல் தெளிப்பதன் மூலம் அதிக மகசூல் பெற ஏதுவாகும்.
நெல் அறுவடைக்குப்பின் உளுந்து சாகுபடி செய்வதன் மூலம், நிலத்தில் 16 கிலோ தழைச்சத்து இடும் செலவினம் குறைத்து, அதிக மகசூல் பெறலாம்.
இந்த வகையில், உற்பத்தி செய்யப்படும் உளுந்து போன்ற பயறு வகைகளை, விலை ஆதரவு திட்டத்தின் கீழ் மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலையான, உளுந்து கிலோவுக்கு 66 ரூபாய், பாசிப்பயறு கிலோவுக்கு 77.50 ரூபாய் விலையில் கொள்முதல் செய்யவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வாறு வேளாண் இணை இயக்குனர் கணேசன் கூறினார்.