ஊட்டி:ஊட்டியில், ஊட்டச்சத்து மாத்திரை அதிகமாக உட்கொண்ட மாணவியர் மயக்கம்அடைந்தனர்.
நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே உள்ள உருது பள்ளி ஒன்றில் படிக்கும், மாணவியருக்கு நேற்று முன் தினம் ஊட்டசத்து மாத்திரை வழங்கப்பட்டது. அதை உட்கொண்ட, 12 வயதான நான்கு மாணவியர் மயக்கம்அடைந்தனர்.
அரசு தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
நீலகிரி சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி கூறுகையில், ''குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மாத்திரை வாரம் ஒருமுறை வழங்கப்பட வேண்டும். ஆனால், இந்த மாணவியர் அதிகளவில் மாத்திரை உட்கொண்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்படுகிறது,'' என்றார்.
ஊட்டி அரசு மருத்துவக் கல்லுாரி டீன் மனோகரி கூறுகையில், ''நான்கு மாணவியர் அதிக ஊட்டச்சத்து மாத்திரையை உட்கொண்டது தெரியவந்துள்ளது.
''அவசர சிகிச்சை பிரிவில் தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக அவர்கள் கோவைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்,'' என்றார்.
கோவை அரசு மருத்துவமனையில், அந்த மாணவியருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.