திருநெல்வேலி:திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில், அப்பர் தெப்ப உற்சவம் கோலாகலமாக நடந்தது.
சைவ, சமண வழிபாட்டினருக்கிடையே முன்பு கருத்து வேறுபாடுகள் இருந்தன.
அப்போது, சமண மதத்தவர்கள் சைவ சமய குரவர்களில் ஒருவரான அப்பர் பெருமானின் பக்தியை சோதிக்க, அவரை கல்லில் கட்டி கடலில் வீசினர். அப்பர் பெருமான் சிவபெருமானை வேண்டிப் பாடினார்.
அப்போது கல், தெப்பமாக மாறி அவர் கடலில் மிதந்ததாக புராணங்கள் கூறுகின்றன. அதை நினைவு கூரும் வகையில், ஆண்டு தோறும் நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவிலில் அப்பர் தெப்ப உற்சவ விழா நடத்தப்படுகிறது.
அம்மன் சன்னிதி பொற்றாமரை குளத்தில் நடந்த தெப்ப உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அப்பர் பெருமான் பவனி வந்தார்.
அதைத் தொடர்ந்து, தெப்ப மண்டபத்தில் சுவாமி கைலாச பர்வத வாகனத்திலும் அம்பாள் தங்க கிளி வாகனத்திலும் எழுந்தருளி அப்பர் பெருமானுக்கு திருக்காட்சி கொடுத்தனர்.