மார்ச் 8, 1934
திருநெல்வேலி மாவட்டம் குறும்பலாப் பேரியில், புலவர் மதனபாண்டியன் - ரத்தினமணி தம்பதிக்கு மகனாக, 1934ல், இதே நாளில் பிறந்தவர், ம.லெ.தங்கப்பா. சிறுவயதிலேயே கம்பராமாயணம், வில்லிபாரதம் உள்ளிட்டவற்றை கற்றறிந்தார். கல்லுாரி மாணவ பருவத்தில், தாகூர், பாரதிதாசனின் படைப்புகளால் ஈர்க்கப்பட்டார். புதுச்சேரியில் விரிவுரையாளராக பணியாற்றிய போது, ஆங்கிலத்தில் இருந்த, 'தி போர்சேக்கன் மெர்மேன்' என்ற நுாலை, தமிழில் மொழி பெயர்த்தார்.
மாணவர்களுடன் சைக்கிளிலேயே நெடுந்தொலைவு பயணித்து, சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். திருவருட்பா, முத்தொள்ளாயிரம், சங்க இலக்கியம், பாரதியார், பாரதிதாசன் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். கவிதை, கட்டுரை, குழந்தை பாடல்களை அதிகளவில் எழுதினார்.
இவரின், 'சோளக் கொல்லை பொம்மை' நுாலுக்காக, 'பால சாகித்ய புரஸ்கார்' விருதை பெற்றார். தமிழ் சங்க கவிதைகளை, 'லவ் ஸ்டாண்ட்ஸ் அலோன்' என்ற பெயரில் ஆங்கில மொழிபெயர்ப்புக்காக, 'சாகித்ய அகாடமி' விருது பெற்றார். புதுவை தமிழ் வளர்ச்சி நடவடிக்கை குழுவின் துணை தலைவராகவும் இருந்த இவர், 2018 மே 31ல், தன், 84வது வயதில் காலமானார்.
ஜிப்மர் மருத்துவமனைக்கு, தன் உடலை தானமாக்கிய, தமிழ் எழுத்தாளர் பிறந்த தினம் இன்று!