கோவை;அவிநாசி சாலையில் உள்ள சி.ஐ.டி., சாண்ட்விச் பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்த பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்களுக்கான, மண்டல அளவிலான தடகளப்போட்டியில், மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.
இன்டர் பாலிடெக்னிக் அதலெடிக் அசோசியேஷன் (ஐ.பி.ஏ.ஏ.,) மற்றும் கிறிஸ்து அரசர் பாலிடெக்னிக் கல்லுாரி சார்பில், கோவை மண்டல அளவிலான தடகளப்போட்டி, அவிநாசி ரோடு சி.ஐ.டி,. பாலிடெக்னிக் கல்லுாரியில் நடத்தப்பட்டது.
கிறிஸ்து அரசர் பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் ஆன்டனி பெர்னாண்டஸ், சி.ஐ.டி., பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் ரேணுகா ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இதில், கோவை மண்டலத்துக்கு உட்பட்ட 25 கல்லுாரிகளில் இருந்து, 450க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
மாணவ மாணவியருக்கு 100மீ., 200மீ., 400மீ., 800மீ., ஓட்டம், தடையோட்டம், தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு தடகளப்போட்டிகள் நடத்தப்பட்டன.
நேற்று நடந்த 5000மீ., ஓட்டத்தில் ராமகிருஷ்ணா கல்லுாரியின் ஆனந்தகிருஷ்ணன் முதலிடம், என்.பி.டி.சி., கல்லுாரியின் யஷ்வந்த் இரண்டாமிடம்; 400மீ., தடையோட்டத்தில் பி.எஸ்.ஜி.,யின் நரேந்திரகுமார் முதலிடம், ஸ்வஸ்திக் இரண்டாமிடம்; குண்டு எறிதலில் கிருஷ்ணா கல்லுாரியின் தானு தர்சன் முதலிடம், ராமகிருஷ்ணா கல்லுாரியின் சலோமா சன்னி இரண்டாமிடம்; நீளம் தாண்டுதலில், சுகுணா கல்லுாரி மாணவர் அபிஷேக் முதலிடம், ராமகிருஷ்ணா மிஷன் கல்லுாரியின் நிகேஷ் இரண்டாமிடம் பிடித்தனர்.
பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில், கோவை அரசு மகளிர் கல்லுாரி ஆர்த்தி முதலிடம், கிருஷ்ணா கல்லுாரி நேத்ரா இரண்டாமிடம், நீளம் தாண்டுதலில், பி.எஸ்.ஜி., கல்லுாரி ஜெயனி முதலிடம், கோவை அரசு மகளிர் கல்லுாரியின் நிஷா இரண்டாமிடம் பிடித்தனர்.