கோவை:வெள்ளக்கிணறு குட்டைப்பகுதியில் கழிவுநீர் தேக்கி வைக்கக் கூடாது, என, சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு குழு கருத்து தெரிவித்துள்ளது.
கோவை மாநகராட்சி பாதாள சாக்கடை திட்டம் வடக்குப்பகுதியில் 2,3,4, 10,11, 12,13,14 மற்றும் 21 ஆகிய வார்டுகளில் உள்ள பயனீட்டாளர்கள் கருத்து கேட்பு கூட்டம், சரவணம்பட்டியில் நடந்தது.
சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு அமைப்பினர் பங்கேற்று, தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
சின்னவேடம்பட்டி ஏரியின், முக்கிய ராஜவாய்க்கால் கணுவாய் வரை உள்ளது. இந்த ராஜ வாய்க்காலில், எவ்வித கழிவுநீரும் இருக்கக் கூடாது.
வெள்ளக்கிணறு குட்டை பகுதிகளில், கழிவு நீர் அல்லது சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை விடாமல் இருப்பதை, மாநகராட்சி உறுதி செய்ய வேண்டும். சின்னவேடம்பட்டி ஏரியை, நன்னீர் ஏரியாக மாற்றி, கோவை வடக்கு பகுதியில் உள்ள விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக மாற்ற வேண்டும்.
அவிநாசி - அத்திக்கடவு நிலத்தடிநீர் செறிவூட்டும் திட்டத்தில் இதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே, கழிவுநீர் மற்றும் சுத்திகரிப்பு நீரை சின்னவேடம்பட்டி ஏரி, ராஜவாய்க்கால், வெள்ளக்கிணறு குட்டைகளில் கலக்காமல் இருப்பதை, மாநகராட்சி உறுதி செய்ய வேண்டும்.
பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும்போது, இவற்றின் கட்டமைப்புகள் பாதிக்கப்படாமல் இருக்க, நீர்வளத்துறையின் அனுமதி பெற்று செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு, சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு அமைப்பு, கவுசிகா நீர்க்கரங்கள் அறக்கட்டளை போன்றவை கோரிக்கை விடுத்துள்ளன.