புதுடில்லி:''உலகப் பொருளாதாரத்தின் ஒளிக்கீற்றாக இந்தியா விளங்குகிறது. உள்கட்டமைப்புகளுக்கான மூலதன செலவுகளை மத்திய அரசு அதிகரித்துள்ளது. இதுவே முதலீடு செய்ய நல்ல தருணம்,'' என, தொழில்துறையினருக்கு, பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனை பெறும், இணைய கருத்தரங்கு நிகழ்ச்சிகளை, மத்திய அரசு நடத்தி வருகிறது.
இதில், தொழில்துறை மற்றும் நிதி சேவை துறை தொடர்பாக நேற்று நடந்த இணையக் கருத்தரங்கில், பிரதமர் மோடி பேசியதாவது:
நம் நாட்டின் பொருளாதாரம், பட்ஜெட், இலக்குகள் தொடர்பான விவாதங்கள் கேள்வியில் துவங்கி, கேள்வியிலேயே முடிவடைந்து வந்தது. தற்போது அந்த நிலை மாறியுள்ளது.
நம் நாட்டை, உலக நாடுகள் உன்னிப்பாக கவனிக்கின்றன. உலகப் பொருளாதாரத்தின் ஒளிக்கீற்றாக இந்தியா விளங்குகிறது.
கொரோனா வைரஸ் பரவல் இருந்தபோதும், 2021 - 2022ல், அன்னிய நேரடி முதலீட்டில் புதிய சாதனையை படைத்துள்ளோம்.
முதலீடுகள் செய்வதற்கு இந்தியா தான் சரியான இடம் என, உலக நாடுகள் பாராட்டுகின்றன.
அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையிலேயே, இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. மூலதன செலவீனங்கள் எனப்படும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக மட்டும், 10லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த முயற்சிகளில், தொழில் துறையினரும் இணைய வேண்டும். தொழில்களில் முதலீடு செய்வதற்கு இதுவே நல்ல தருணம்; வாய்ப்பை தவறவிட்டு விடாதீர்கள்.
நம்முடைய யு.பி.ஐ., எனப்படும் ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தளம் வாயிலாக, 75 ஆயிரம் கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. நம்முடைய, ரூபே மற்றும் யு.பி.ஐ., ஆகியவை, செலவு குறைவான தொழில்நுட்பம் மட்டுமல்ல. அது உலகத்துக்கான புதிய அடையாளம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இணைய கருத்தரங்கில் பிரதமர் மோடி மேலும் பேசியதாவது:நம்முடைய வரிவிதிப்பு முறைகளில் பெரிய சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி., எனப்படும் தொழில் மற்றும் சேவை வரி முறை, அதிக வருவாயை ஈட்டித் தருகிறது. வருமான வரி முறையில் மாற்றம், வர்த்தக வரி குறைப்பு ஆகியவை, தொழில் நிறுவனங்களுக்கு சாதகமாகும்.
இந்த வரி மாற்றங்களால், வரி வசூல் அதிகரித்துள்ளது. அதிகமானோர், வரி செலுத்தி வருகின்றனர். இது, நம்முடைய நடைமுறை மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை காட்டுகிறது.நாட்டின் பொருளாதார வளர்ச்சி, அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும். நாம் செய்யும் ஒவ்வொரு சிறிய செயல் வாயிலாக, இதில் பங்களிப்பு அளிக்க முடியும். கடைகளில் எந்தப் பொருள் வாங்கினாலும், 'பில்' கேட்டு வாங்குங்கள். இதனால் கிடைக்கும் வரி, மக்களுக்கு திட்டங்களாக சென்றடையும்.இவ்வாறு அவர் பேசினார்.