வட மாநிலத் தொழிலாளர்கள் விவகாரத்தில், ஆளும் தரப்பில் சமரச முயற்சிகள் மேற்கொண்டுள்ள நிலையில், 'ஆட்சியை கவிழ்க்க சதி நடக்கிறது' என்ற அதிர்ச்சி தகவலை, முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ளார். அதே நேரத்தில், வெளி மாநில தொழிலாளர் விவகாரத்தில், தி.மு.க., அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை விவரித்து தான் எழுதியுள்ள கடிதத்தை, டி.ஆர்.பாலு வாயிலாக, பீஹார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு கொடுத்து அனுப்பியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் மார்ச் 1ல் தன் 70வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அன்று மாலை, சென்னையில் அவரது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது.
இதில், பீஹார் மாநில துணை முதல்வர் தேஜஸ்வி, உத்தர பிரதேச மாநில எதிர்க்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் பங்கேற்றனர்.
போலி 'வீடியோ'க்கள்
அதைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலினை, தேசியத் தலைவராக பிரபலப்படுத்தும் முயற்சியை, தி.மு.க., துவக்கியது.அதே நேரத்தில், எதிர்பாராத விதமாக, தமிழகத்தில் வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக, போலி வீடியோக்கள், சமூக வலைதளங்களில் சிலரால் பகிரப்பட்டன. இவை, பீஹார், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் பதற்றத்தை ஏற்படுத்தின. தமிழகத்தில் பணிபுரியும் வட மாநிலத் தொழிலாளர்கள் வெளியேற்றத்திற்கும் காரணமாக அமைந்தது. இது, தி.மு.க., அரசுக்கு திடீர் நெருக்கடியை ஏற்படுத்தியது.
'தமிழகத்தில் தொழிலாளர்கள் யாரும் தாக்கப்படவில்லை. வீண் வதந்தி பரப்பப்படுகிறது' என, தமிழக அரசு சார்பில் அவசர விளக்கம் அளிக்கப்பட்டது. எனினும் உண்மைத் தன்மையை அறிய, பீஹார், ஜார்க்கண்ட் மாநில அரசுகள், அதிகாரிகள் குழுவை, தமிழகத்துக்கு அனுப்பி வைத்தன.
வட மாநிலத் தொழிலாளர்களிடம், சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்கள் போலியானவை என்பதை விளக்க, தி.மு.க., அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.
இவ்விவகாரத்தில், அனைத்து தரப்பினரையும் சமாதானப்படுத்த, அரசு எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைத்தது; பீஹார், ஜார்க்கண்ட் மாநில அதிகாரிகள் குழுக்கள், தங்கள் ஆய்வை முடித்து, ஊர் திரும்பின.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், ஒழுகினசேரியில், தி.மு.க., மாவட்ட அலுவலகத்தில் கருணாநிதி சிலையை, முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

பின், அவர் பேசியதாவது:நாட்டை பிளவுபடுத்தும் எண்ணத்துடன் உலவிக் கொண்டிருக்கும் சிலர், நம் திராவிட மாடல் ஆட்சி மீது புழுதி வாரி துாற்றுகின்றனர். ஆட்சியை எப்படியாவது கெடுதல் செய்து அப்புறப்படுத்த வேண்டும் என, முயற்சி செய்து பார்க்கின்றனர்.எங்காவது ஜாதி, மதக் கலவரத்தை துாண்டலாமா, மக்களிடம் பிளவுகளை ஏற்படுத்தலாமா என, திட்டமிட்டு செயல்படுத்துகின்றனர்.நம் மீது சொல்லப்படும் விமர்சனங்களுக்கு, நான் பதில் சொல்லி நேரத்தை வீணடிப்பது இல்லை. யாரை வைத்து பதில் சொல்ல வேண்டுமோ, அவர்களை வைத்து பதில் சொல்கிறோம்.லோக்சபா தேர்தல் விரைவில் வர இருக்கிறது. தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமைத்து, லோக்சபா, சட்டசபை, உள்ளாட்சி தேர்தல்கள், சமீபத்திய ஈரோடு இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளோம். இதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.இவ்வாறு முதல்வர் பேசினார்.
நடவடிக்கை
வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில், ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக, முதல்வர் குற்றம் சாட்டினாலும், மற்றொரு பக்கம், பீஹார் மாநில முதல்வரை சமாதானப்படுத்த, தி.மு.க., பார்லிமென்ட் குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவை, பீஹாருக்கு அனுப்பியுள்ளார்.
அங்கு முதல்வர் நிதிஷ்குமாரை சந்தித்து, முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தை அளித்தார். அதில், வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்புக்கு, தி.மு.க., அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை, முதல்வர் விரிவாக குறிப்பிட்டுள்ளார்.வட மாநிலத் தொழிலாளர்கள் தொடர்பான போலி வீடியோக்கள் குறித்தும், அதை வெளியிட்ட நபர்கள் மீது, அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும், தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய, அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை பற்றியும் நிதிஷிடம் பாலு விளக்கினார்.

இதற்கிடையே, மாமல்லபுரம், கடம்பாடி பகுதியில், 19 வயதுடைய பீஹார் தொழிலாளியைத் தாக்கிய இருவர், கைது செய்யப்பட்டுள்ளனர்.
தி.மு.க., துணைப் பொதுச் செயலர் ஆ.ராஜா அறிக்கை:தமிழகத்தில் பணிபுரியும் வட மாநிலத் தொழிலாளர்களின் நிம்மதியை கெடுக்கும் வகையில், சுயநல அவதுாறு அரசியலை பா.ஜ., செய்து வருகிறது. அதற்கு லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வான் துணை போவது கண்டனத்துக்குரியது. பீஹாரில் இருந்து தமிழகம் வந்த அரசுக் குழு, இங்கு பணிபுரியும் வேற்று மாநில தொழிலாளர்களுக்கு, எந்த ஒரு சிக்கலும் இல்லை என்பதை உறுதி செய்திருக்கிறது. எனவே, பா.ஜ.,வுக்கான 'பி டீம்' அரசியலை, சிராக் பஸ்வான் பீஹாரில் செய்யட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பணிகள் பாதிப்பு
ஈரோடு மாநகராட்சியில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்ட பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலம் கிளம்பிச் சென்றதால், தற்போது இந்த பணிகள் நின்று போயுள்ளன. அவர்களை போனில் தொடர்பு கொண்டு ஈரோடு வருமாறு மாநகராட்சி அதிகாரிகள் அழைப்பு விடுத்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் புவனகிரியில் நடந்த பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில் பா.ஜ., மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேசுகையில்,
ஸ்டாலின், தேர்தல் பிரசாரத்தின் போது, புலம்பெயர் தொழிலாளர்களை பற்றி என்னவெல்லாம் விஷம் கக்கினார் என்பது தெரியும். அண்ணாமலை அதைக் கோடிட்டு காட்டினார்; அதற்காக அவர் மீது வழக்கு பதிந்துள்ளனர். எங்கள் மாநில தலைவரை தொட்டால்,தமிழகம் தாங்காது.
கோவை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு கூட்டத்தில் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., பேசுகையில், டெக்ஸ்டைல் துறையில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. பழிவாங்கும் போக்குடன் மாநில அரசு, கோவையை நடத்துகிறது. வடமாநில தொழிலாளர் பிரச்னையால் பாதிப்பு வரட்டும் என விட்டிருக்கின்றனரோ என்ற சந்தேகம் இருக்கிறது. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகே இது நடக்கிறது.