புதுப்பட்டினம்:வாயலுார் பகிங்ஹாம் கால்வாயில், ஆங்கிலேயர் கால அடையாளமாக உள்ள 'லாக்' எனப்படும் கதவணையை இடித்து, தனியார் நிலத்திற்கு பாதை அமைக்க முயற்சி நடக்கிறது.
தமிழகம் - ஆந்திரம் மாநிலங்கள் இடையே, வங்க கடற்கரையிலிருந்து, 2 கி.மீ., மேற்கில், கடலுக்கு இணையாக, பகிங்ஹாம் கால்வாய் உள்ளது. 420 கி.மீ.,க்கு நீண்டுள்ள கால்வாய், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், முக்கிய உள்நாட்டு நீர்வழிப் பாதையாக விளங்கியது.
கடலோர பகுதிகளில் விளைந்த விவசாய பொருட்கள், உப்பு, விறகு உள்ளிட்டவற்றை, ஒரு பகுதியிலிருந்து பிற பகுதிகளுக்கு படகில் கொண்டு செல்ல, ஆங்கிலேயர் செயற்கை கால்வாயாக, இதை வெட்டினர்.
கடலிலிருந்து கால்வாய்க்கு கடல் நீர் வர, கடற்கரை பகுதி முகத்துவாரங்கள் உள்ளன.
கடலில் ராட்சத அலைகள் எழும்பும், அமாவாசை, பவுர்ணமி நாட்கள் மற்றும் கடல் சீற்ற காலங்களில், முகத்துவாரங்கள் வழியே, கடல் நீர் கால்வாயில் பெருக்கெடுக்கும். மழை நீர் கால்வாயில் தேங்கும்.
நெடுஞ்சாலை போக்குவரத்து துவங்கியதைத் தொடர்ந்து, கால்வாய் படகு போக்குவரத்து கைவிடப்பட்டு வழக்கொழிந்தது.
மத்திய அரசு, இதை உள்நாட்டு நீர்வழிப் பாதையாக மீண்டும் பயன்படுத்த முடிவெடுத்து, ஆய்வு செய்துள்ளது.
படகில், மீன் உள்ளிட்ட கடல் உணவுப் பொருட்கள், உப்பு, உரம், மரம் என, 300 டன் ஏற்றிச் செல்வதற்கேற்ப, இதை மேம்படுத்த திட்டமிட்டது.
பயணியர், சரக்கு போக்குவரத்திற்காக, முதலில் திருவான்மியூர் - கல்பாக்கம் பகுதியில், 125 கோடி ரூபாய் மதிப்பில், முக்கிய இடங்களில் படகு துறை, எடை அளவையகம், துணை மின் நிலையம் உள்ளிட்ட கட்டமைப்புகளை ஏற்படுத்தவும் முடிவெடுத்தது.
அடுத்து, கல்பாக்கம் - கூனிமேடு இடையே, மேம்பாட்டிற்கு திட்டமிட்டது.
இந்திய உள்நாட்டு நீர்வழித்தட ஆணையம், கடந்த 2014ல், செயற்கைக்கோள் சாதனம் மூலம், கால்வாய் நீர்மட்டம், தற்போதைய துார்வு, மேடு, பள்ளங்கள், தட்பவெப்பம், ஒரு பகுதிக்கும், மற்றொரு பகுதிக்கும் இடையே உள்ள ஆழ வித்தியாசம் என ஆய்வு செய்யப்பட்டு, அடையாள கற்கள் நடப்பட்டன.
இத்திட்டம் கிடப்பில் உள்ளதால், இறால் பண்ணைகள் ஆக்கிரமித்து, கால்வாய் குறுகியுள்ளது. கழிவு நீர் கலந்து சீரழிகிறது. இதன் நீர்வரத்து கால்வாய்கள் துார்க்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நீர்நிலை பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அவற்றை பாதுகாத்து, ஆவணப் பதிவின்படி பரப்பை அளவிட்டு உறுதிப்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
செங்கல்பட்டு மாவட்ட பொதுப்பணித் துறையினர், கோவளம் - இடைக்கழிநாடு, 70 கி.மீ., கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, எல்லை கற்கள் நட முடிவெடுத்துள்ளனர்.இதற்காக, 3.5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இச்சூழலில், கால்வாயில், ஆங்கிலேயர் கால அடையாளமாக உள்ள கட்டமைப்புகளை, சுயநலவாதிகள் இடிக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கல்பாக்கம் அடுத்த, வாயலுார், குன்னத்துார், மணமை உள்ளிட்ட பகுதிகளில், கடலின் உயரலை, தாழ்வலை சூழலுக்கேற்ப, கால்வாயில் நீரை பெருக்கவும், வெளியேற்றவும், 'லாக்' எனப்படும் கட்டமைப்பு, கடந்த 1886ல் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் பலகைகள் அழிந்து, தற்போது கான்கிரீட் தடுப்புகள் மட்டுமே உள்ளன. இதன் பராமரிப்பிற்காக, இதையொட்டி ஊழியர் அறையும் உண்டு.
உள்நாட்டு நீர்வழித்தட மேம்பாடு கருதி, கால்வாய் பழங்கால தரைப்பாலங்களை இடித்து, படகு போக்குவரத்திற்கேற்ப, உயர்மட்ட பாலமாக அமைக்கப்படுகிறது.
இச்சூழலில், வாயலுார், காரைத்திட்டு பகுதி, 'லாக்' அமைப்பை, தனியார் சுயநலத்திற்காக இடிக்க முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது.
'லாக்'கை இடிக்காமல் பாதுகாக்கவும், இருளர்களுக்கு வசதி ஏற்படுத்துகிற போர்வையில், தனியாருக்காக பாலம் அமைக்கவுள்ள முயற்சியை தடுக்கவும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
பகிங்ஹாம் கால்வாய் பரப்பைஅளவிட்டு, எல்லை கற்கள் நடவுள்ளோம். வாயலுார் பகுதி கால்வாயில், பாலம் கட்டவும், சாலை அமைக்கவும் இயலாது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
- பெயர் வெளியிட விரும்பாத பொறியாளர்,
பொதுப்பணித் துறை.
இப்பகுதி பகிங்ஹாம் கால்வாயின் கிழக்கில், தனியாரின் பரந்த நிலம் உள்ளது. இதற்கு பாதை இல்லை. பல ஆண்டுகளுக்கு முன், இப்பகுதியை வாங்கியவர், சொகுசு விடுதி அமைக்க முடிவெடுத்து, முந்தைய மாவட்ட கலெக்டர்கள், இங்கு ஆய்வும் செய்தனர். பாதை சிக்கலால் கிடப்பில் உள்ளதாக தெரிகிறது.
இதற்கிடையே, கால்வாயின் மேற்கிலும், தனியார் வீட்டு மனை உருவாக்க முயற்சி நடப்பதாக தெரிகிறது. கால்வாயை ஒட்டி, இருளர்களும் வசிக்கின்றனர். இருளர் வசிப்பிட பகுதி வரை, அவர்களின் போக்குவரத்து வசதிக்காக, சென்னை அணுமின் நிலையம் அமைத்த தார்ச்சாலை உள்ளது. இருளர் பகுதியிலிருந்து, 'லாக்' பகுதி வரை, கால்வாய் கரைப்பகுதி மண் பாதையும், பாலாற்றங்கரை மண் பாதையும் உள்ளன.இப்பாதை பொதுமக்களுக்கு அவசியமற்ற நிலையில், இருளர்களுக்கு பாதை வசதி ஏற்படுத்துகிறோம் என்கிற போர்வையில், மண் பாதையை சாலையாக மேம்படுத்தவும், 'லாக்'கை இடித்து, தரைப்பாலம் அமைக்கவும் சிலர் முயற்சிக்கின்றனர்.
இதற்காக, அங்கிருந்த ஊழியர் தங்கும் அறையை இடித்துள்ளனர்.இப்பகுதி இருளர் வாழ்வாதார சூழல் எனக்கூறி, அண்மையில் ஆய்வு செய்த கலெக்டர் ராகுல்நாத்திடம், சில பிரமுகர்கள் வலியுறுத்தி, அவரும் வாய்மொழியாக, பாலம் அமைக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தியதாக தெரிகிறது.இந்நிலையில், மண் பாதையில், புதுப்பட்டினம், பழைய கிழக்கு கடற்கரை சாலையில் பெயர்த்த, தார் கலவையை நிரப்பி, பாதையை மேம்படுத்தும் பணிகளை செய்து வருகின்றனர்.