பாகூர் : கடலில் மூழ்கி இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு, முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சம் வழங்கிட வேண்டும் என பா.ஜ., வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து பா.ஜ., மாநில துணை தலைவர் விக்ரமன் விடுத்துள்ள அறிக்கை:
கிருமாம்பாக்கம் அடுத்த வள்ளுவர்மேடு - நரம்பை கிராமத்திற்கு இடையிலான கடற்கரையில் குளித்த காட்டுக்குப்பத்தை சேர்ந்த புஷ்பராஜ், கிேஷார்ராஜ், சோபன்ராஜ் என்ற மூன்று சகோதரர்கள் நீரில் மூழ்கி இறந்துள்ளனர்.
இச்சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இது போன்ற துயர சம்பவங்கள் இனி நிகழாமல் தடுக்கப்பட வேண்டும். விடுமுறை நாட்களில் கடற்கரை பகுதியில் போலீசாரின் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். குறிப்பாக, நரம்பை - வள்ளுவர்மேடு கிராமத்திற்கு இடையிலான பிக் பீச் மற்றும் மணப்பட்டு கடற்கரை பகுதியில் விடுமுறை நாட்களில் புறக்காவல் நிலையம் ஒன்று செயல்பட வேண்டும்.
கடற்கரை சுற்றுலா தலங்களை போலீசார் தங்கள் கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்து, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்.
கடல் அலையில் சிக்கி, இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு, முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 10 லட்சம் வழங்கிட வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.