மேட்டுப்பாளையம்;வேளாண் துறையில் உள்ள திட்டங்கள் குறித்து, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், காரமடையில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
தமிழ்நாடு வேளாண் துறை மற்றும் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ், விவசாய திட்டங்கள் குறித்து, விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள், காரமடையில் நடந்தன. நிகழ்ச்சிக்கு வேளாண் உதவி இயக்குனர் பாக்கியலட்சுமி தலைமை வகித்தார். காரமடை நகராட்சி தலைவர் உஷா வெங்கடேஷ் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
உழவன் செயலி, கலைஞரின் அனைத்து கிராம வேளாண் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம், பயிர் காப்பீடு, சொட்டு நீர் பாசனம், எந்தெந்த திட்டங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது என்பது குறித்து, விடியல் கலை குழுவினர், நாட்டுப்புற கலையான, தப்பாட்டம் ஆடி விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இது குறித்து வேளாண் உதவி இயக்குனர் பாக்கியலட்சுமி கூறுகையில்,காரமடை வட்டாரத்தில், கெம்மாரம்பாளையம், சிக்கதாசம்பாளையம், தேக்கம்பட்டி, மூடுதுறை ஆகிய ஊராட்சிகள், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு, தேர்வு செய்து, வேளாண் திட்டங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக தற்போது கூடுதலாக வேளாண் உபகரணத் தொகுப்பு, தார்பாலின், பேட்டரி ஸ்பிரேயர், 50 சதவீத மானியத்தில், சிறு, குறு, பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட உள்ளது. எனவே மானிய விலையில் வழங்கும் நலத்திட்டங்களை பெற்று, விவசாயிகள் பயன்பெற வேண்டும், என்றார்.
வட்டார தொழில்நுட்ப மேலாளர் சரிதா, உதவி தொழில் நுட்ப மேலாளர் மகேந்திரன் ஆகியோர், இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் வேளாண் அலுவலர் சண்முகப்பிரியா, உதவி வேளாண் அலுவலர் சிவராஜ், தமிழ்நாடு வேளாண் பல்கலை கிராம தங்கல் திட்ட மாணவிகள், விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்றனர்.