சென்னை:'அரசு வழக்கறிஞர்களுக்கு, கட்டண வரம்பு நிர்ணயித்த அரசு உத்தரவை ஏற்க முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், கூடுதல் அட்வகேட் ஜெனரலாக, மூத்த வழக்கறிஞர் அய்யாதுரை பதவி வகித்தார்.
நெடுஞ்சாலைத் துறை சார்பில் 'ஆர்ப் பிட்ரேஷன்' வழக்குகளில் ஆஜரானதற்காக, 3.94 கோடி ரூபாய் வழக்கறிஞர் கட்டணத்தை தர அரசுக்கு உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஆலோசனை
கடந்த, 2018ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில், கட்டணம் நிர்ணயித்த உத்தரவையும் எதிர்த்து வழக்கு தொடர்ந்தார்.
கடந்த, 2018 மே மாதம் பொதுத்துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.
அதில், ஆர்ப்பிட்ரேஷன் வழக்குகள், சிவில் வழக்குகள் உள்ளிட்டவற்றில் உயர் நீதிமன்றத்தில் ஆஜராகும் அரசு வழக்கறிஞர்களுக்கு, கட்டண வரம்பு, 10 லட்சம் ரூபாய் என்றும், முக்கியத்துவம் வாய்ந்த நிதி பிரச்னை தொடர்பான வழக்குகளுக்கு, நிதித்துறை உடன் ஆலோசித்து கட்டணம் நிர்ணயிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
மூத்த வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் பிறப்பித்த உத்தரவு:
அரசின் கொள்கைக்காக, அரசின் கொள்கை ரத்து ஆகாமல் உறுதி செய்வதற்காக, அரசு வழக்கறிஞர்பாடுபடுகிறார்.
அரசு சார்பில் முறையிடும் வழக்கறிஞரின் மதிப்பை அளவிட முடியாது.
ஒரு வழக்கு சிறிதாக இருக்கலாம் அல்லது பெரிதாக இருக்கலாம். அரசின் கண்ணியம், புனிதம், அரசு வழக்கறிஞர்களின் கையில் தான் இருக்கிறது. இதை யெல்லாம், அதிகாரிகள் ஒரு போதும் புரிந்து கொள்ள மாட்டார்கள்.
ஆர்ப்பிட்ரேஷன் வழக்கு அல்லது சிவில் வழக்குகளில் ஆஜராவதற்கு, 10 லட்சம் ரூபாய் என வரம்பு நிர்ணயம் செய்ததில் அர்த்தம் இல்லை. எந்த அடிப்படையில் இந்த தொகையை நிர்ணயித்தனர் என்பது தெரியவில்லை.
உத்தரவு
இந்த அரசாணை, சட்டத் தொழிலில் இருப்பவர்களை புண்படுத்துவது போல் உள்ளது. இந்த அரசாணை, தன்னிச்சையானது என்பதால், அதன் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன.
மனுதாரர் கோரிய வழக்கறிஞர் கட்டணத்தை, அரசு பரிசீலித்து, 12 வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். விதிகளை, வழிமுறைகளை, அரசு வகுக்கலாம்; ஆனால், கட்டண வரம்புநிர்ணயிப்பதை ஏற்க முடியாது.
இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.