கொள்ளையடிக்க முயன்றவர் கைது
கோவை தெற்கு உக்கடம் புல்லுக்காட்டில், மாநகராட்சி நகர் நல மையம் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இந்த மையத்தின் பூட்டை உடைத்து, மர்ம நபர் ஒருவர் உள்ளே சென்றார்.
அங்கு ஏதும் கிடைக்காததால், தப்பி சென்றார். மறுதினம் காலையில் நகர் நல மையத்தை திறக்க வந்தவர்கள், பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.புகாரின்படி,
பெரிய கடை வீதி போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில், அந்த மர்ம நபர் தெற்கு உக்கடம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்த அசாருதீன் என்கிற சீனி ஆசார், 28 என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
போன் பறித்த தொழிலாளி கைது
கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன், 39; கூலி தொழிலாளி. இவர் தனது வீட்டு முன் நின்று கொண்டு, மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஒருவர், கிருஷ்ணனின் மொபைல் போனை பறித்து ஓடினார். கிருஷ்ணன் அவரை துரத்தி பிடித்தார். அவரை ராமநாதபுரம் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் விசாரித்ததில் அவர் விருதுநகரை சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜா, 43 என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கைப்பையை பறித்த வாலிபர் கைது
திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்தவர் பெரியசாமி, 29; பேக்கரி ஊழியர். இவர் காந்திபுரம் பஸ் நிலையத்தில் ஈரோடு செல்வதற்காக அரசு பஸ்சில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர், பெரியசாமியின் கைப்பையை பறித்து ஓடினார்.
பெரியசாமி, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கி பிடித்தார். பின் அவரை, காட்டூர் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் விசாரித்ததில் அவர் கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த மாரிமுத்து, 44 என்பது தெரிந்தது. அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
பெண்ணிடம் நகை பறிப்பு
கோவை வெங்கட்ராமன் கோவில் வீதியைச் சேர்ந்த கார்த்திகேயன் மனைவி சுமங்களா தேவி, 58; டெய்லர். இவர் சுக்கிரவார்பேட்டை வழியாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் அவ்வழியாக இரண்டு வாலிபர்கள் வந்தனர். அதில் பின்னால் அமர்ந்திருந்த வாலிபர், சுமங்களா தேவி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச்சென்றனர். அவர் வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில், போலீசார் வாலிபர்களை தேடி வருகிறார்கள்.