பெ.நா.பாளையம் : துடியலூரில் உள்ள இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தின் கோவை கிளைக்கு நடப்பு ஆண்டுக்கான புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள் பதவி ஏற்று கொண்டனர்.
இதில், எமரால்டு ஜுவல் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் சீனிவாசன் பேசுகையில், பட்டய கணக்காளர்களின் வழிகாட்டுதலும், ஆலோசனைகளும் அனைத்து தொழில்களுக்கும் அவசியம் என்றார். இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ராமசாமி பேசுகையில், இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம், தொடர்ந்து, தனது கல்வி முறையில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிப்பதில் மற்றும் பட்டய கணக்காளர்களிடத்தில் பயிற்சி பெறும் முறைகளில், காலத்திற்கு ஏற்ப பல்வேறு மாற்றங்களையும், புதிய முறைகளையும், நடைமுறைப்படுத்தி வருகிறது என்றார்.
இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தின் கோவை கிளை நடப்பாண்டு தலைவராக நாககுமார், துணை தலைவராக விஷ்ணு ஆதித்தன், செயலாளராக ராகுல் சந்திரசேகரன், பொருளாளராக சர்வஜித் எஸ் கிருஷ்ணன் மற்றும் மாணவர்கள் அமைப்பின் தலைவராக சதீஷ் ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர்.
இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தின் தென் மண்டல அலுவலகத்தின் முன்னாள் தலைவர் ஜலபதி, ஐ.சி.ஏ.ஐ., யின் நிர்வாக குழு உறுப்பினர் ராஜேஷ் உள்ளிட்ட மூத்த கணக்காளர்கள் கோவை கிளையின் முன்னாள் தலைவர்கள், புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசினர்.