அ.தி.மு.க., - பா.ஜ., இடையே இல்லை மோதல் !

Updated : மார் 10, 2023 | Added : மார் 08, 2023 | கருத்துகள் (33) | |
Advertisement
சென்னை: ஒரே கூட்டணியில் இடம்பெற்றுள்ள, அ.தி.மு.க., - பா.ஜ., கட்சிகள் இடையே நாளுக்கு நாள் மோதல் வலுத்து வருகிறது. ஆள் இழுப்பு நடவடிக்கையில், அ.தி.மு.க., மும்முரமாக இருப்பதால், மாவட்ட அளவிலான பா.ஜ., நிர்வாகிகள், கூண்டோடு இடம்பெயரத் துவங்கி உள்ளனர். இதனால், கடும் கோபம் அடைந்துள்ள பா.ஜ.,வினர், பதிலடி நடவடிக்கையாக பழனிசாமி உருவப்படத்தை எரித்தனர்.தமிழகத்தில் அ.தி.மு.க., கூட்டணியில்
ADMK, BJP, PALANISAMY, ANNAMALAI, EDAPADI PALANISAMY, JAYAKUMAR, அதிமுக, பாஜ, மோதல்,

சென்னை:

ஒரே கூட்டணியில் இடம்பெற்றுள்ள, அ.தி.மு.க., - பா.ஜ., கட்சிகள் இடையே நாளுக்கு நாள் மோதல் வலுத்து வருகிறது. ஆள் இழுப்பு நடவடிக்கையில், அ.தி.மு.க., மும்முரமாக இருப்பதால், மாவட்ட அளவிலான பா.ஜ., நிர்வாகிகள், கூண்டோடு இடம்பெயரத் துவங்கி உள்ளனர். இதனால், கடும் கோபம் அடைந்துள்ள பா.ஜ.,வினர், பதிலடி நடவடிக்கையாக பழனிசாமி உருவப்படத்தை எரித்தனர்.


தமிழகத்தில் அ.தி.மு.க., கூட்டணியில் இருந்தாலும், கடந்த ஆண்டு நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், பா.ஜ., தனித்து களம் இறங்கியது. அதேநேரத்தில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு பா.ஜ., ஆதரவு அளித்தது. எனினும், அ.தி.மு.க., நிர்வாகிகள் அரவணைத்து செல்ல மறுத்ததால், பா.ஜ.,வினர் அதிருப்தியில் இருந்தனர்.


இந்நிலையில், தேர்தலில் படுதோல்வியை சந்தித்ததும், பா.ஜ.,வால் தங்களுக்கு எந்த பயனும் இல்லை என, அ.தி.மு.க., நிர்வாகிகள் பேசத் துவங்கினர். தோல்விக்கு காரணம், அ.தி.மு.க.,வில் ஏற்பட்டுள்ள பிளவு தான் என்றும், அணிகள் இணைய வேண்டும் என்றும் பா.ஜ.,வினர் கூறினர்.



விமர்சனம்


இது, இரு கட்சிகளுக்கும் இடையே உரசலை உருவாக்கியது. இந்த நேரத்தில், பா.ஜ., தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் நிர்மல்குமார், கடந்த 5ம் தேதி, இடைக்காலப் பொதுச் செயலர் பழனிசாமியை சந்தித்து, அ.தி.மு.க.,வில் இணைந்தார். அதோடு நிற்காமல், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து, அறிக்கை வெளியிட்டார். பழனிசாமிக்கு தெரியாமல், இப்படியொரு அறிக்கை வந்திருக்காது என நம்பும் பா.ஜ.,வினர், பழனிசாமி மீது கோபம் அடைந்தனர்.அதை பொருட்படுத்தாத அ.தி.மு.க., தலைமை, ஆள் இழுப்பு நடவடிக்கையை தொடர்ந்தது.


நேற்று முன்தினம் பா.ஜ., தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநிலச் செயலர் திலீப் கண்ணன், அறிவுசார் பிரிவு முன்னாள் மாநிலச் செயலர் கிருஷ்ணன், இதர பிற்படுத்தப்பட்டோர் அணிச் செயலர் ஜோதி, திருச்சி புறநகர் மாவட்ட துணைத் தலைவர் விஜய் ஆகியோர், அதன் வலையில் விழுந்தனர். கூட்டணி கட்சி என்றும் பார்க்காமல், பா.ஜ.,வில் இருந்து வருபவர்களுக்கு, அ.தி.மு.க.,வில் சிவப்பு கம்பளம் விரிக்கப்படுவதை பார்த்து, பா.ஜ., தலைமை எரிச்சல் அடைந்தது.


அதை வெளிப்படுத்தும் விதமாக, 'ஜெயலலிதா, கருணாநிதி போல் நானும் ஒரு தலைவர். நான் எடுக்கும் முடிவில் உறுதியாக இருக்கிறேன்.'திராவிட கட்சிகளிலிருந்து வந்து பா.ஜ.,வை வளர்க்க வேண்டும் என்ற நிலை மாறி, பா.ஜ.,வினரை இழுத்து, திராவிட கட்சிகளை வளர்க்க வேண்டும் என்ற நிலை உருவாகி உள்ளது' என பழனிசாமியை, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சாடினார்.


அதைத் தொடர்ந்து, இரு கட்சியினர் இடையே மோதல் வெடித்தது. பா.ஜ., தலைமையை விமர்சித்து அ.தி.மு.க.,வினரும், பதிலுக்கு அ.தி.மு.க., தலைமையை விமர்சித்து, பா.ஜ.,வினரும் வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டனர்.இதன் தொடர்ச்சியாக, துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பா.ஜ.,வினர், 'துரோகி பழனிசாமியை கண்டிக்கிறோம்' என, 'போஸ்டர்' ஒட்டினர். பழனிசாமி புகைப்படத்தை, பா.ஜ., இளைஞர் அணி மாவட்டத் தலைவர் தினேஷ் உட்பட நான்கு பேர் எரித்தனர்.


இந்த சம்பவம் குறித்து, கோவில்பட்டியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜு கூறுகையில், 'அரசியலில் முதிர்ச்சி இல்லாதவர்கள், பழனிசாமி போட்டோவை எரித்துள்ளனர். அவர்களை பா.ஜ., தலைமை கண்டிக்க வேண்டும். 'அ.தி.மு.க.,வில் இருந்து நயினார் நாகேந்திரன், மாணிக்கம் போன்றோர் விலகி, பா.ஜ.,வில் இணைந்தனர். அதேபோல பா.ஜ., நிர்வாகிகளும் எங்கள் கட்சியில் இணைந்தனர். லோக்சபா தேர்தலில் பா.ஜ., கூட்டணி குறித்து காலம் தான் முடிவு செய்யும்' என்றார்.


பழனிசாமி புகைப்படம் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து, கொங்கு மண்டல அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஒருவர், பா.ஜ., தலைவர்களை தொலைபேசியில் அழைத்து, 'எங்கள் கட்சி வழிகாட்டுதல் குழு உறுப்பினர் மாணிக்கத்தை, பா.ஜ.,வில் இணைத்ததற்கு, நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.'அதேபோல், உங்கள் கட்சியிலிருந்து விரும்பி வந்தவர்களை இணைத்துள்ளோம். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. எனவே, பழனிசாமி புகைப்பட எரிப்பு சம்பவம் தேவையில்லாதது' என கண்டித்துள்ளார்.



உருவ பொம்மை


இதையடுத்து, 'பழனிசாமி புகைப்படம் எரிப்பு போன்ற செயலில் ஈடுபட வேண்டாம்' என, தமிழக பா.ஜ., தரப்பில், அக்கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், அ.தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகள், பா.ஜ.,வினருக்கு பதிலடி தரும் வகையில், சென்னையில் அண்ணாமலை உருவ பொம்மையை எரிக்க திட்டமிட்டனர்; இதை அறிந்த பழனிசாமி, அதை தடுத்து விட்டார்.அதே நேரத்தில், பா.ஜ.,வில் இருந்து ஆள் இழுக்கும் பணியை, அ.தி.மு.க., தொடர்கிறது. நேற்று முன்தினம் இரவு, பா.ஜ., உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவு செயலர் லதா, தாம்பரம் ஒன்றியத் தலைவர் வைதேகி ஆகியோர், அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.ஆனால், அந்த விபரங்களை, அ.தி.மு.க., வெளியிடவில்லை; அக்கட்சியில் சமீபத்தில் இணைந்த நிர்மல்குமார், தன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


இதன் தொடர்ச்சியாக, சென்னை மேற்கு மாவட்ட பா.ஜ., தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு தலைவர் அன்பரசு, துணைத் தலைவர் சரவணன், மாவட்ட செயலர்கள் 10 பேர், அ.தி.மு.க.,வில் இணைந்த நிர்மல்குமாருடன், அரசியல் பாதையில் பயணிப்பதாக அறிவித்துள்ளனர். அதைத் தொடர்ந்து, துாத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் ராஜு முன்னிலையில், அம்மாவட்ட பா.ஜ., நிர்வாகி கோமதி நேற்று, அ.தி.மு.க.,வில் இணைந்தார்.கூட்டணியில் இருந்து கொண்டே, பா.ஜ., நிர்வாகிகளை கூண்டோடு, அ.தி.மு.க., இழுப்பது, பா.ஜ., தலைமைக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக, இரு கட்சிகளுக்கு இடையே மோதல் வலுத்து வருகிறது.இது நீடிக்குமானால், கூட்டணியில் விரிசல் ஏற்படுவது உறுதி என்கிறது, பா.ஜ., வட்டாரம்.


கல் வீசினால் உடைவதற்கு, அ.தி.மு.க.,கண்ணாடி அல்ல; சமுத்திரம். அதில் கல்வீசினால், கல் காணாமல் போகும்.அ.தி.மு.க.,வில் மிகப் பெரிய எழுச்சிஏற்பட்டுள்ளதால், பலரும் விருப்பப்பட்டு இணைகின்றனர். பா.ஜ., தொண்டர்களை அண்ணாமலை கட்டுப்படுத்த வேண்டும். அ.தி.மு.க., தொண்டர்கள் கிளர்ந்தெழுந்தால் என்ன ஆவது?

ஜெயகுமார்

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்



'ஏன் கோட்டை விட்டீர்கள்?'

பா.ஜ.,வில் இருந்து விலகுபவர்கள், ஆளும் கட்சியான தி.மு.க.,வில் இணையாமல், எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வில் போய் இணைவது ஏன் என்ற கேள்வி, தி.மு.க., வட்டாரத்தில் எழுந்திருக்கிறது. தி.மு.க.,வின் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகியை அழைத்து பேசிய முதல்வர் ஸ்டாலின், 'பா.ஜ., நிர்வாகிகளை, நம்ம கட்சிக்கு ஏன் அழைத்து வரவில்லை; அவர்களை எப்படி அ.தி.மு.க.,வுக்கு செல்ல விட்டீர்கள்?' என கேட்டதாக கூறப்படுகிறது. மேலும், இவ்விவகாரத்தில் உளவுத் துறையினர் கோட்டை விட்டது எப்படி என்றும் விசாரிக்கப்படுகிறது.இதற்கிடையில் மாற்று கட்சி நிர்வாகிகள், தி.மு.க.,வில் இணைவதற்கு ஆளும் கட்சி நிர்வாகிகளே முட்டுக்கட்டையாக உள்ளதாக கூறப்படுகிறது. 'நீங்கள் இங்கே வர வேண்டாம்; நாங்களே மரியாதை இல்லாமல் இருக்கிறோம்' எனக் கூறி தடுத்து விடுவதாக சொல்லப்படுகிறது.



ஜெயக்குமார் பேட்டி விவரம்


மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் பேசியதாவது: பொது செயலர் தேர்தல் குறித்து ஆலோசனை ஏதும் நடத்தவில்லை. லோக்சபா தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.


பா.ஜ.,வுடன் மோதல் என்று யார் கூறினார்கள். எந்த மோதலும் இல்லை. மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணியும், தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணியும் தொடர்கிறது. கூட்டணி குறித்து அ.தி.மு.க., எந்த சர்ச்சையான கருத்தும் கூறவில்லை.


ஜெயலலிதா குறித்து அண்ணாமலை கூறியது அவரது தனிப்பட்ட கருத்து. ஜெயலலிதா போல் யாரும் ஆக முடியாது. இனி யாரும் பிறக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (33)

கணேசன்      விழுப்புரம் சொட்டையன்க்கு ~ B J P யை பார்த்து பயம்
Rate this:
Cancel
ஆறுமுகம்    பாளையங்கோட்டை உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தனித்து தானே போட்டி இட்டது ~ அந்த உள்ளாட்சி தேர்தலில் சிறுபான்மையினர் ஓட்டு ஏன் அதிமுகவுக்கு கிடைக்கவில்லை ~ அந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு 18 சதவீதம் ஓட்டு தான் கிடைச்சது ~
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
09-மார்-202321:12:57 IST Report Abuse
vbs manian அ தி மு க தடம் புரள்கிறது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X