சென்னை:நீர்நிலைகளின் எல்லை முறையாக வரையறுக்கப்படாததால், அதைச் சார்ந்த பகுதிகளில் கட்டுமான திட்டங்கள் மேற்கொள்ள, தடையின்மை சான்று பெறுவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், நீர் நிலைகளை ஒட்டிய பகுதிகளில், புதிய கட்டுமான திட்டங்களைச் செயல்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட பகுதிகளில் வீடு, மனை விற்பனை செய்வதாக இருந்தால், 'அந்த சொத்து நீர்நிலை சம்பந்தப்பட்டது அல்ல' என்று கடிதம் அளித்தால் தான், பத்திரப் பதிவு நடக்கும்.
கட்டட அனுமதிக்கு விண்ணப்பிக்கும்போதும், 'இந்த நிலம், நீர் நிலையை ஆக்கிரமிப்பது அல்ல; நீர் வழித்தடத்தில் இல்லை' என்பதற்கு, அரசிடம் தடையின்மை சான்று பெற வேண்டியது கட்டாயம்.
ஆனால், நீர்நிலைகளின் எல்லையை வரையறுப்பதில், வருவாய்த் துறையும், பொதுப்பணித் துறையும் இணைந்து செயல்பட்டு முறையாக வரையறுக்காததால், தடையின்மை சான்று வாங்குவதில் சிக்கல் எழுகிறது.
இது தொடர்பாக, கட்டுமான துறையினர் கூறியதாவது:
ஒவ்வொரு பகுதியிலும் நீர்நிலையின் எல்லை என்ன, அதன் சார்பு பகுதிகள் எவை, நீர் நிலைக்கான 'சர்வே' எண்கள் எவை, அதை ஒட்டி எந்தெந்த பகுதிகள் தடை செய்யப்பட்டவை, எந்தெந்த பகுதிகளில் தடையின்மை சான்று பெற வேண்டும் என்பதற்கான எல்லை வரையறையை, தெளிவுபடுத்த வேண்டும்.
இது மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. இதைச் சரி செய்யாவிட்டால், தமிழகத்தில் பத்திரப்பதிவு தப்பும் தவறுமாக தான் நடக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.