சென்னை:சென்னையில், 1,000 அரசு பஸ்கள் இயக்கப்படாமல், பணிமனைகளில் நிறுத்தப்பட்டுள்ளன.
சென்னையில், கொரோனா காலத்தில் பஸ்கள் பெரும்பாலும் காலியாகவே சென்றன. இதனால், பெரும் நஷ்டம் ஏற்பட்டது.
இதை ஈடுகட்ட, ஆட்கள் குறைவாக பயணித்த வழித்தடங்களில், தற்காலிகமாக பஸ்கள் நிறுத்தப்பட்டன. சில பஸ்களின் வழித்தடங்கள் மாற்றம் செய்யப்பட்டன. கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கப்பட்ட பின், படிப்படியாக பஸ்கள் இயக்கப்பட்டன.
ஓய்வுபெறும் வயது, 60 ஆக உயர்த்தப்பட்ட நிலையில், இந்தாண்டில் மட்டும், மாநகர போக்குவரத்துக் கழகத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் ஓய்வு பெற்றுள்ளனர். அதே நேரத்தில் 12 ஆண்டுகளாக, புதிதாக ஆள் சேர்ப்பு நடக்கவில்லை. இதனால், ஓட்டுனர்கள் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.
ஆளும் கட்சி தொழிற்சங்கத்தினரில் பலர் பணி செய்யாமல், சம்பளம் பெறுகின்றனர். பலர் மாற்றுப் பணி என்ற பெயரில், கட்சிப் பணி செய்கின்றனர்.
இதனால், சென்னையில், 1,000 பஸ்கள் இயக்கப்படாமல், பணிமனைகளில் நிறுத்தப்பட்டுள்ளன. பராமரிப்பு இல்லாத காரணத்தால், பாழாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
இதுகுறித்து, கம்யூ., கட்சியின் ஏ.ஐ.டி.யு.சி., சங்க பொதுச்செயலர் ஆறுமுகம் கூறியதாவது:
பத்தாண்டுகளாக பணியாளர் தேர்வு செய்யப்படாததால், ஓட்டுனர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இதனால், பஸ்கள் சும்மா நிறுத்தப்பட்டுள்ளன. பணியாளர்களுக்கும் வேலைப்பளு அதிகரித்துள்ளது.
அவர்களுக்கான வார ஓய்வு, விடுப்புகள் கிடைப்பதில்லை. இதனால் ஏற்படும் மன உளைச்சலால் விபத்துகள் நடக்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.