சென்னை:'திருமணமானவர் என்பதற்காக, கருணை வேலையை நிராகரிக்க முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சரஸ்வதி; இவரது தாய், மதிய உணவு திட்டத்தில், சமையல்காரராக பணியாற்றி வந்தார். 2014 ஜனவரியில் மரணமடைந்தார். இதையடுத்து, கருணை வேலை கோரி, 2014 ஜூனில் சரஸ்வதி விண்ணப்பித்தார்; பின், 2017ல் விண்ணப்பித்தார்.
தாய் இறந்து, மூன்று ஆண்டுகளுக்கு பின் விண்ணப்பித்ததாக கூறி, மனு நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் சரஸ்வதி வழக்கு தொடர்ந்தார்.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, அதை தள்ளுபடி செய்தார். 'திருமணமானவர் என்பதால், கருணை வேலை பெற உரிமை இல்லை' என, தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இதை எதிர்த்து சரஸ்வதி, மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை, நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், கே.ஜி.திலகவதி அடங்கிய அமர்வு விசாரித்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் அகிலேஷ் ஆஜரானார்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
திருமணமானவர் என்பதால், கருணை வேலை பெற உரிமையில்லை என, தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். திருமணமானவர் கருணை வேலை பெற உரிமை உள்ளது என, கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செல்லும் என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மனுதாரருக்கு தற்போது, 38 வயது. அவரது தகுதிக்கு ஏற்ப, நான்கு மாதங்களுக்குள் பொருத்தமான வேலை வழங்க, அரசுக்கு உத்தரவிடப்படுகிறது.
இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.