சென்னை:நகர்ப்புற உள்ளாட்சிகளில் பணிபுரிந்த, 3,618 பணியாளர்களுக்கு, தகுதி வாய்ந்த ஓய்வூதியப் பலன்களை வழங்கும்படி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் சிவ்தாஸ் மீனா, உள்ளாட்சி நிதி தணிக்கை இயக்குனருக்கு, கடிதம் எழுதி உள்ளார்.
கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:
சென்னை மாநகராட்சி தவிர்த்து, பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில், 1997 ஏப்.,30க்கு பின் பலர், தொகுப்பூதிய பணியில் அமர்த்தப்பட்டனர்.
இவர்கள், 2003 ஏப்.,1க்கு முன், முறையான ஊதிய விகிதத்திற்கு மாற்றப்பட்டனர்.
இவர்கள், தகுதி வாய்ந்த ஓய்வூதிய பலன்கள், அவர்களின் வாரிசுதாரர்கள் குடும்ப ஓய்வூதியம் பெற தகுதியானவர்கள் என, நகராட்சி நிர்வாக இயக்குனர் தெரிவித்து உள்ளார்.
அதையேற்று, 1,779 நகராட்சி பணியாளர்கள், மாநகராட்சிகளை சேர்ந்த, 1,839 பணியாளர்களுக்கு, தகுதி வாய்ந்த ஓய்வூதியப் பலன்களை வழங்க, பரிந்துரைக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.