சென்னை:தமிழகத்தில், ஏழு மாவட்டங்களில், 33 தொழிற்சாலை திட்டங்கள், கட்டட அனுமதிக்காக காத்திருப்பது தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., வாயிலாக, கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், தொழிற்சாலை திட்டங்களுக்கு விரைவாக அனுமதி அளிக்கும் நடைமுறை உருவாக்கப்பட்டது.
இதற்காக, ஒற்றை சாளர முறையில் கட்டட அனுமதி உள்ளிட்ட அனைத்து அனுமதியும் வழங்கப்படுகிறது.
இதில், ஆன்லைன் முறையில் வரும் விண்ணப்பங்களை விரைந்து பரிசீலித்து, உரிய முடிவு எடுக்க வேண்டும் என, சி.எம்.டி.ஏ., - டி.டி.சி.பி., அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி, ஏழு மாவட்டங்களில், 33 தொழில் திட்டங்கள் கட்டட அனுமதிக்காக காத்திருக்கின்றன.
இவற்றில் டி.டி.சி.பி.,யில், 27 திட்டங்களும், சி.எம்.டி.ஏ.,வில், ஆறு திட்டங்களும் ஒப்புதலுக்காக காத்திருப்பது தெரிய வந்துஉள்ளது.