புதுடில்லி: ஏப்ரல் 1ம் தேதி முதல், தங்க நகைகள் மற்றும் பொருட்களின் விற்பனைக்கு, தரக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் ஆறு இலக்க 'ஹால்மார்க் தரக் குறியீட்டு எண்' கட்டாயம் என அரசு அறிவித்துள்ளதை அடுத்து, நகைக் கடை உரிமையாளர்களிடமிருந்து கால அவகாச கோரிக்கை எழுந்துள்ளது.
தங்க நகை மற்றும் பொருட்களுக்கு இந்த குறியீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளதை அடுத்து, நகை வாங்கும் நுகர்வோருக்கு தரமான பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய முடியும் என்பது மட்டுமின்றி, கடத்தல் மற்றும் சட்டவிரோத வழிகளில் வரும் தங்கத்தின் சில்லரை வர்த்தகத்தையும் தடுக்க முடியும் என அரசு நம்புகிறது.
இந்நிலையில், விற்பனையாளர்கள் கூடுதல் அவகாசம் கேட்டு கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து, 'அகில இந்திய ஜெம் மற்றும் ஜுவல்லரி கவுன்சில்' தலைவரான சையம் மெஹ்ரா கூறியதாவது:
அரசின் உத்தரவு குறித்து, சங்கத்தின் உறுப்பினர்கள், கடந்த ஜனவரி மாதம் நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சகத்தின் அதிகாரிகளை சந்தித்து, காலக்கெடுவை ஏப்ரலுக்கு பதிலாக, ஜூன் மாதம் என மாற்றி அவகாசம் அளிக்க கோரிக்கை வைத்தோம்.
மேலும், காலக்கெடுவால் தொழிலில் ஏற்படும் சிரமங்கள் குறித்து பட்டியலிட்டு, விரைவில் அதிகாரப்பூர்வமாக கடிதமும் எழுத உள்ளோம்.
எங்களின் சரக்குகளில் 20 முதல் 25 சதவீத பொருட்களை, ஹால்மார்க் எண் பெறுவதற்காக கொடுத்து, அதை திரும்பப் பெற மூன்று மாதங்கள் ஆகிறது. அத்துடன், கட்டணத்தை யும் 45 ரூபாய் என்பதை 10 ரூபாயாக குறைக்க வேண்டும். இந்தியா முழுதும் கட்டாய ஹால்மார்க் குறியீடு என்பது, தற்போதுள்ள உள்கட்டமைப்பில் உடனடி சாத்தியமானதாக இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.