நாகப்பட்டினம்:தமிழக முகாம்களில் தங்கியிருந்த இலங்கை அகதிகளை, நாகை அருகே கள்ளப்படகு மூலம் நியூசிலாந்து நாட்டிற்கு கடத்த முயன்ற மூன்று பேரை, 'கியூ' பிரிவு போலீசார் கைது செய்தனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து தமிழகத்தின் பல்வேறு முகாம்களில் தங்கியிருந்த இலங்கை அகதிகள், நியூசிலாந்து நாட்டிற்கு கள்ளப்படகில் தப்பிச் செல்ல இருப்பதாக, 'கியூ' பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் நடத்திய சோதனையில், வேளாங்கண்ணி சர்ச் நிர்வாகத்திற்கு சொந்தமான விடுதியில் தங்கியிருந்த துாத்துக்குடி மாவட்டம் குளத்து வாய்பட்டி முகாம் கேனுஜன், 34, கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவர் பள்ளி முகாம் ஜெனிபர்ராஜ், 23, தினேஷ், 18 , உட்பட ஆறு பேர் பிடிபட்டனர்.
இவர்களை வேளாங்கண்ணி போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை செய்தனர்.
விசாரணையில், இலங்கை செல்ல, மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரைச் சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான, பதிவு செய்யப்படாத விசைப்படகிற்கு 17 லட்சம் ரூபாய் பேரம் பேசி, பணம் கொண்டு வந்ததாக தெரிவித்தனர்.
அதையடுத்து, 17 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொடர் விசாரணையில், சிவகங்கை ஒக்கூர் அகதிகள் முகாம் வரதராஜன், 38, விழுப்புரம் கீழ் புத்துப்பட்டு முகாம் ரவிச்சந்திரன், 41, திருவண்ணாமலை செய்யாறு முகாம் அன்பரசன், 29, ஆகிய மூவரும், பல்வேறு முகாம்களில் தங்கியிருந்த நண்பர்கள் மூலம், நியூசிலாந்து நாட்டிற்கு சென்றால் நிறைய சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி, அகதிகளை கடத்த முயற்சித்தது தெரிய வந்தது.
வரதராஜன் உள்ளிட்ட மூவரையும் கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.