தஞ்சாவூர்:கும்பகோணம் அருகே, அரசு பள்ளியில் மேற்கூரையின் கான்கிரீட் பெயர்ந்து விழுந்ததில், மூன்றாம் வகுப்பு மாணவர் தலையில் பலத்த காயமடைந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே, பருத்திக்குடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 18 மாணவ - -மாணவியர் படிக்கின்றனர்.
நேற்று முன்தினம், பள்ளிக் கட்டடத்தின் மேல்கூரையில் இருந்து கான்கிரீட் பெயர்ந்து விழுந்தது. இதில், பருத்திக்குடி, வளையாவட்டம் திருக்கழித்தட்டை கிராமத்தைச் சேர்ந்த கோபி மகன், மூன்றாம் வகுப்பு படிக்கும் விக்னேஷ், 8, என்ற சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
காயம் அடைந்த மாணவனை, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தலையில் 30-க்கும் மேற்பட்ட தையல் போடப்பட்ட நிலையில், சிறுவன் சிகிச்சை பெற்று வருகிறார்.
பள்ளி கட்டடம் பழுதாகி இருப்பது பற்றி, பலமுறை யூனியன் அலுவலகத்தில் பள்ளி நிர்வாகம், கிராம மக்கள் சார்பில் புகார் கூறப்பட்டுள்ளது. யூனியன் அலுவலர்கள் அலட்சியத்தால், அசம்பாவிதம் நடந்ததாக, கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.