நாகப்பட்டினம்:''நாகை அருகே கச்சா எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கடலில் எண்ணெய் கலந்தது தொடர்பாக விளக்கம் கேட்டு, சி.பி.சி.எல்., நிர்வாகத்திற்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட உள்ளது,'' என, தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.
நாகை அடுத்த நாகூர் பட்டினச்சேரியில், சி.பி.சி.எல்., நிறுவனத்திற்குச் சொந்தமான கச்சா எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை, அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டார்
பின், அமைச்சர் கூறியதாவது: கச்சா எண்ணெய் கடலில் கலந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய, மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கச்சா எண்ணெய் கசிவுக்கான விளக்கம் கேட்டு, மாசு கட்டுப்பட்டு வாரியம் சார்பில் சி.பி.சி.எல்., நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.
வந்தோரை வாழ வைக்கும் தமிழகத்தில், வடமாநிலத்தவர் மீது தாக்குதல் வாய்ப்பே இல்லை. வெளிமாநிலத்தைச் சேர்ந்த சிலரால் பரப்பப்பட்ட விஷம பிரசாரம் இது.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.