செஞ்சி:செஞ்சி கோட்டையில் கம்பீரத்துடன் காட்சி தரும் வேலுார் வாயிலை சுற்றுலா பயணிகள் காண்பதற்கும், காலியாக உள்ள பகுதியில் பூங்கா அமைக்கவும் இந்திய தொல்லியல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தென் இந்தியாவில் முழு அமைப்புடன் உள்ள கோட்டையாக செஞ்சி கோட்டை உள்ளது. வரலாற்று பின்னணி கொண்ட செஞ்சி கோட்டை தற்போது தமிழகத்தில் மகாபலிபுரம், தஞ்சைக்கு அடுத்த வரலாற்று சுற்றுலா தலமாக உருவெடுத்துள்ளது. இந்திய அளவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் இடங்களில் செஞ்சி கோட்டை 5வது இடத்தில் உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்து வரும் செஞ்சி கோட்டையை 13ம் நுாற்றாண்டில் கட்ட துவங்கினர். 17 ம் நுாற்றாண்டு வரை செஞ்சி கோட்டையை பல்வேறு பேரரசர்கள் விரிவுபடுத்தி வலிமை மிக்க கோட்டையாக மாற்றினர். மூன்று மலைகளை 12 கி.மீ., துாரத்திற்கான மதில் சுவர்களுடன் இணைத்து கலை நயமும், பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த கம்பீரமான கோட்டையாக கட்டி உள்ளனர்.
கோட்டையின் உள்ளே ஏராளமான மண்டபங்கள், அழகிய சிற்பங்கள், கோவில்கள், குளங்கள், போர்வீரர்கள் குடியிருப்பு, அகழிகள், பிரம்மிக்க வைக்கும் தானிய களஞ்சியங்கள், பழங்கால பீரங்கிகள் என சுற்றுலா பயணிகளை கவரும் அம்சங்கள் ஏராளமாக உள்ளன.
இங்குள்ள நாயக்கர்கள் கட்டிய கல்யாண மகால், கோட்டையை பாதுகாக்க பயன்படுத்திய இழுவை பாலம், வெடிமருந்து கிடங்குகள் இடிந்து போன தர்பார் மண்டபம், சுழல் படிக்கட்டு ஆகியன காண்பவர்களுக்கு புதிய அனுபவமாக உள்ளது.
எதிர்கால சந்ததியினர் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கிய வரலாற்று ஆவணமாக செஞ்சி கோட்டை உள்ளது. இதில் சுற்றுலா பயணிகள் பார்வையிடாமல் செல்லும் பகுதிகளும் ஏராளமாக உள்ளன. அதில் மிக முக்கியமானது வேலுார் வாயில் பகுதி.
மூன்று மலைகளை இணைத்து முக்கோண வடிவிடிவில் கட்டியுள்ள செஞ்சி கோட்டையில் தரை பகுதியில் கிருஷ்ணகிரி-சந்திரகிரி மலைகளுக்கிடையே புதுச்சேரி வாயிலும், சந்திரகிரி-ராஜகிரி மலைகளுக்கிடையே திருச்சிராப்பள்ளி வாயிலும், ராஜகிரி-கிருஷ்ணகிரி மலைகளுக்கிடையே வேலுார் வாயிலும் உள்ளன.
இந்த மூன்று வழியாக மட்டுமே கோட்டைக்குள் செல்ல முடியும். இதில் சிறைசாலையுடன் உள்ள புதுச்சேரி வாயிலை தற்போது சுற்றுலா பயணிகள் பார்த்து வருகின்றனர்.
காட்டின் நடுவில் இருப்பதால் திருச்சிராப்பள்ளி வாயிலை காணமுடியாது. புதுச்சேரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேலுார் வாயிலை சுற்றுலா பயணிகள் காண முடியாமல் பிரதான வழியை இருப்பு கேட்டினால் பூட்டி வைத்துள்ளனர்.
செஞ்சி கோட்டையில் பல அடுக்கு மதில் சுவர்கள் இருந்தாலும் பகைவர்கள் எளிதில் கடக்க முடியாத பிரம்மாண்டமான மதில் சுவருடன் வேலுார் வாயிலை கட்டி உள்ளனர். யானை படையோ, காலாட்படையினரோ நேரடியாக கோட்டை கதவுகளை தாக்க முடியாத வகையில் நுழைவு வாயிலை அறைவட்ட வடிவில் அமைத்துள்ளனர்.
எதிரிகள் கோட்டையை சூழ்ந்து கொண்டால் எளிதில் தாக்கவும், முக்கிய நபர்கள் வாயிலின் வழியாக வரும் போது வரவேற்கவும் மாடங்களை அமைத்துள்ளனர். கோட்டை காவலர்கள் தங்குவதற்கு செஞ்சி கோட்டையில் வேறு எங்கும் காண முடியாத இரண்டு அடுக்கு கல் மண்டபமும், பிரதான வாயிலின் பக்க வாட்டில் துணை வழியும், வாயிலுக்கு வெளியே காவலர் கூண்டும் பார்ப்பவர்களை வியக்கும் படி அமைத்துள்ளனர்.
இந்த பகுதியை சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதில்லை.
தற்போதுள்ள சிவன் கோவில் பின்புறம் கோட்டைக்கு செல்லும் சாலையில் மேற்கில் வேலுார் வாயிலுக்கு செல்லும் சாலை உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லி கற்களை கொண்டு தற்காலிக சாலை அமைத்தனர். இதன் பிறகு கிடப்பில் போட்டதால் தற்போது சாலையே இல்லாமல் கரடு முரடான பகுதியாக மாறி உள்ளது.
இந்திய தொல்லியல் துறையினர் நிதி மற்றும் பணியாளர் பற்றாக்குறையால் இந்த சாலையை இது வரை புதுப்பிக்காமல் உள்ளனர். திருவண்ணாமலை சாலையில் இருந்து வரும் நுழைவு பகுதியையும் பல ஆண்டுகளாக பூட்டி வைத்துள்ளனர். ஆள் நடமாட்டமில்லாமல் இருப்பதால் இங்கு அனைத்து சமூக விரோத நடவடிக்கையும் நடந்து வருகிறது. நுழைவு வாயில் எதிரே பல ஏக்கர் இடம் முள்செடிகள் முளைத்து புதராக உள்ளது.
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேலுார் வாயிலின் முன்புறம் பூங்கா அமைத்தால் மேலும் சுற்றுலா வளர்ச்சியடையும். எனவே தமிழக சுற்றுலாத்துறையினர் இந்த பகுதியை பார்வையிட்டு இந்திய தொல்லியல் துறையுடன் இணைந்து பூங்கா அமைக்கவும், வேலுார் வாயிலை சுற்றுலா பயணிகள் பார்வையிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.