புதுச்சேரி: ஒருநாள் கலெக்டர் ஊக்குவிப்பு திட்டம் பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி கல்லுாரி மாணவர்களுக்கு விரிவுப்படுத்தப்படும் என கலெக்டர் மணிகண்டன் தெரிவித்தார்.
புதுச்சேரி கலெக்டருடன் ஒருநாள் என்ற திட்டத்தை கலெக்டர் மணிகண்டன் துவங்கியுள்ளார். அதன்படி, ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையன்று அரசு பள்ளி மாணவர்கள் கலெக்டருடன் ஒருநாள் முழுவதும் பயணிக்கலாம். அவர் செல்லும் அத்தனை கூட்டங்களிலும், ஒரு நாள் நிழல் கலெக்டராக பங்கேற்கலாம்.
கலெக்டருக்கான முழு மரியாதையும் நிழல் கலெக்டராக உள்ள பள்ளி மாணவர்களுக்கும் அளிக்கப்படும். சிவில் சர்வீஸ் தேர்வு, மக்கள் பணி குறித்து அறிந்து கொள்ளலாம்.
இரண்டாம் வாரமாக நேற்று திருவள்ளுர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி தீபிகா கலந்து கொண்டார்.கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த அவருக்கு போலீசார் சல்யூட் அடித்து வரவேற்பு கொடுத்தனர்.
தொடர்ந்து அவருக்கு கலெக்டரின் பணிகள் குழு முழுவதுமாக எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து தலைமை செயலகத்தில் துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். வ.உ.சி.,பள்ளி, அண்ணா திடல் ஸ்மார்ட் சிட்டி பணிகளை பார்வையிட்டார்.
கலெக்டர் மணிகண்டன் கூறுகையில், ஆட்டோ டிரைவர் மகளான தீபிகா, கலெக்டர் அலுவலகம், சிவில் சர்வீசஸ் பணிகள் குறித்து முழுவதுமாக தெரிந்து கொண்டார்.
அடுத்து, ஒருநாள் கலெக்டர் ஊக்குவிப்பு திட்டம் பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி அரசு மற்றும் தனியார் கல்லுாரி மாணவர்களுக்கு விரிவுப்படுத்தப்படும் என்றார்.