கோவையில் பல்லாயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் இருந்தும், விளையாட்டுகளை மேம்படுத்தத் தேவையான மைதான கட்டமைப்புகளை உருவாக்காமல் இருப்பது, கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
தமிழகத்தில், சென்னைக்கு அடுத்ததாக கோவையில்தான் அதிக விளையாட்டு வீரர்கள் இருக்கின்றனர். பல்வேறு விளையாட்டுகளிலும், தடகளங்களிலும் இங்குள்ள பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர்களும், கிளப் அணியினரும் தேசிய அளவிலும், மாநில அளவிலும் வெற்றிகளைக் குவித்து வருகின்றனர்.
இதற்காகவே, பல கோடி ரூபாய் செலவழித்து, மைதான கட்டமைப்புகளையும் கல்வி நிறுவனங்கள் உருவாக்கி வைத்துள்ளன.
அடிப்படை வசதிகளே இல்லாத, நேரு ஸ்டேடியத்தைத் தவிர்த்து, கோவையில் அரசு சார்பிலான பெரிய மைதானங்களோ, உள் விளையாட்டு அரங்கங்களோ அமைக்கப்படாமல் இருப்பது, இங்குள்ள விளையாட்டு வீரர்களை முடக்கிப் போடுவதாகவுள்ளது.
அவுங்க அப்படி...
பிற மாநிலங்களில், கோவையை விட சின்னச்சின்ன நகரங்களில் எல்லாம், சர்வதேச கிரிக்கெட் போட்டி, கால்பந்து போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்துவதற்குத் தகுதியான விளையாட்டு மைதானங்கள் உள்ளன.
ஆனால் அரசு சார்பில் புதிதாக எந்த விளையாட்டு கட்டமைப்பும், கடந்த 30 ஆண்டுகளாக ஏற்படுத்தப்படவே இல்லை.
அ.தி.மு.க., ஆட்சியில், இங்கு சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று கூறப்பட்டது; அதற்கு இடம் கூட தேர்வு செய்யப்படவில்லை.
அதேபோல, அ.தி.மு.க., ஆட்சியில் ஆர்.எஸ்.புரம் சாஸ்திரி மைதானத்தை, சர்வதேச தரத்திலான ஹாக்கி மைதானமாக மாற்றும் முயற்சியும் துவங்கி, பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது.
இவுங்க இப்படி...
தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், நேரு ஸ்டேடியம் எதிரில், பல்நோக்கு விளையாட்டு அரங்கம், உலகத்தரத்தில் நீச்சல் குளம், மாணவர் விளையாட்டு விடுதி உள்ளிட்டவை அமைக்கவும், வாலிபால், பூப்பந்து, கபடி, கூடைப்பந்து, கோ-கோ ஆகிய விளையாட்டுகளுக்கு உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படுமென்றும் அறிவிக்கப்பட்டது.
இதற்காக அதிகாரிகள் வந்து ஆய்வும் செய்தனர். ஆனால் இன்று வரை எந்த நிதியும் ஒதுக்கவில்லை; வேலையும் துவங்கவில்லை.
இவை போதாதென்று, முதல்வர் கேட்டபடி, கோவையின் எம்.எல்.ஏ.,க்கள் பலரும், வடவள்ளி-ஓணாப்பாளையம் செல்லும் வழியில் உள்ள கோவில் பூமியில் நவீன விளையாட்டு மைதானம், தொண்டாமுத்துாரில் கிரிக்கெட் மைதானம் , நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயரில், கோவையில் விளையாட்டு அகாடமி என பல கோரிக்கைகளை, கடிதங்களாகவே கொடுத்தனர்.
உதயநிதி, தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராக வந்த பின்பாவது, விளையாட்டு வீரர்களின் தேவைகள், கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் இப்போது வரை ஒரு வேலையும் நடக்கவில்லை.
கோவையில் கட்சி நிகழ்ச்சிக்காக மட்டுமே, அமைச்சர் உதயநிதி வந்து செல்வது, இங்குள்ள பல்லாயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் மற்றும் ஆர்வலர்களை கடும் அதிருப்தி அடைய வைத்துள்ளது.
இரண்டு கட்சிகளின் ஆட்சிகளிலும், கோவையின் மைதான தேவைகளை வைத்து, 'வாக்குறுதி' விளையாட்டு மட்டும் தொடர்கிறது!
-நமது நிருபர்-