வில்லிவாக்கம் : ஆறு மாதத்திற்கு முன் சாலையை,'மில்லிங்' செய்து விட்டு, புதிய சாலை அமைக்காமல் இருப்பதால், வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து, விபத்தில் சிக்கி வருகின்றனர்.
சென்னையின் பல்வேறு இடங்களில், மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைத்து, புதிய சாலைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அப்போது, 'மில்லிங்' எனப்படும், பழைய சாலையை சுரண்டி அதன் மேல் தார்ச் சாலை அமைக்கும் முறையில் சாலை அமைக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது.
இதனால், புதிய சாலைகள் அமைக்கும் இடங்களில், சாலைகள் முதலில், 'மில்லிங்' செய்யப்படுகின்றன.
'மில்லிங்' செய்யப்பட்ட பின், உடனடியாக புதிய சாலைகள் அமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், சில இடங்களில், சாலைகள் 'மில்லிங்' செய்யப்பட்டு பல மாதங்கள் ஆகியும், புதிய சாலைகள் அமைக்கப்படாமல் இருப்பது, பகுதி மக்களிடயே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, அண்ணா நகர் மண்டலம், 94வது வார்டில் வில்லிவாக்கம், ஜெகநாதன் நகர் உள்ளது. இந்த நகரில், பிரதான சாலை உட்பட மொத்தம் ஒன்பது சாலைகள் உள்ளன.
இதில், முதலாவது பிரதான சாலை, ஆறு மாதங்களுக்கு முன், மாநகராட்சி சார்பில் 'மில்லிங்' செய்யப்பட்டது. அதன் பின், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து ஜெகநாதன் நகர் பொதுமக்கள் கூறியதாவது:
வில்லிவாக்கத்தில் பல இடங்களில், கண்துடைப்புக்கு புதிய சாலை அமைக்கும் பணி நடக்கிறது. ஜெகநாதன் நகரில் அவசர அவசரமாக சாலைகள் 'மில்லிங்' செய்யப்பட்டன. அதன் பின், பல மாதங்களாக சாலை அமைக்காமல் கிடப்பில் வைத்துள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால், 'நிதி கிடைத்தால் போடுவோம்' என, அலட்சியமாக பதில் அளிக்கின்றனர்.
மில்லிங் செய்யப்பட்ட சாலையில், இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து காயமடைகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் சாலையில் நடந்து செல்ல கூட முடியவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.