பெங்களூரு-லஞ்ச வழக்கில், பா.ஜ., - எம்.எல்.ஏ., மாடால் விருபாக் ஷப்பா இன்று, லோக் ஆயுக்தா முன் விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.
தாவணகெரே மாவட்டம், சென்னகிரி பா.ஜ., - எம்.எல்.ஏ., மாடால் விருபாக் ஷப்பா, 75. கர்நாடகா அரசின் சோப் மற்றும் டிடர்ஜென்ட் நிறுவன தலைவராக இருந்தார்.
இந்த நிறுவனத்திற்கு ரசாயன பொருட்கள் சப்ளை செய்யும் டெண்டர் வழங்க, ஸ்ரேயாஸ் என்பவரிடம், 40 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, மாடால் விருபாக் ஷப்பாவின் மகன் பிரசாந்த் உட்பட ஆறு பேர் கடந்த 2ம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்கள் அலுவலகம், வீடுகளில் நடந்த சோதனையில், 8 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
தலைமறைவாக இருந்த மாடாலுக்கு, நேற்று முன்தினம் கர்நாடக உயர் நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமின் வழங்கியது.
முன்ஜாமின் உத்தரவு நகல் கையில் கிடைத்த, 48 மணி நேரத்திற்குள் விசாரணைக்கு ஆஜராகவும் உத்தரவிடப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு, முன்ஜாமின் நகல் அவரது கையில் கிடைத்தது. இன்று மாலை 4:00 மணிக்குள் அவர் ஆஜராக வேண்டும்.
இந்நிலையில், நேற்று காலை சொந்த ஊரான சன்னகேஸ்புராவில் உள்ள கோவில்களுக்கு சென்று மாடால் விருபாக் ஷப்பா சுவாமி தரிசனம் செய்தார். பின், 'ஆடி' காரில் பெங்களூரு புறப்பட்டார். மற்றொரு காரில், லோக் ஆயுக்தா போலீசாரிடம் சிக்கிய, 8 கோடி ரூபாய்க்கான ஆவணங்கள் உடன் சென்றன.
இன்று காலை 11:00 மணிக்கு மேல், விதான் சவுதா அருகே எம்.எஸ். பில்டிங்கில் உள்ள, லோக் ஆயுக்தா தலைமை அலுவலகத்தில், விசாரணை அதிகாரி முன்ஆஜர் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாடாலிடம் கேள்வி கணைகளை தொடுக்க, போலீசாரும் தயாராக உள்ளனர். மாடால் விசாரணைக்கு ஆஜராகும் போது, அவரது ஆதரவாளர்கள் லோக் ஆயுக்தா தலைமை அலுவலகம் முன்பு கூடுவர் என எதிர்பார்க்கப்படுவதால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.
அறிக்கையில் 'திடுக்'
நேற்று முன்தினம் முன்ஜாமின் மனு மீது விசாரணை நடந்த போது, டெண்டர் வழங்கும் அதிகாரம் தலைவருக்கு இல்லை என்றும், நிர்வாக இயக்குனர் அல்லது சேர்மனுக்கு தான் உள்ளதாகவும், மாடாலின் வக்கீல் வாதாடினார்.
இதன் எதிரொலியாக, பெங்களூரு ராஜாஜி நகரில் உள்ள, கர்நாடக சோப் மற்றும் டிடர்ஜென்ட் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில், நேற்று லோக் ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
ரசாயன பொருட்களை வினியோகம் செய்ய விடுக்கப்பட்ட டெண்டர் ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது சில ஆவணங்களை, போலீசார் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், டெண்டருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது பற்றி, கர்நாடக சோப் மற்றும் டிடர்ஜென்ட் சங்கத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை நேற்று முன்தினம் தலைமை செயலர் வந்திதா சர்மாவிடம் தாக்கல் செய்தனர்.
டெண்டர் விதிமுறை
அந்த அறிக்கையில், டெண்டர் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. மேலும் அரசால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட, கூடுதலாக 139 கோடி ரூபாய்க்கு ரசாயனம் மற்றும் சோப் தயாரிப்பு மூலப்பொருட்கள் வாங்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டு உள்ளது.