வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஆமதாபாத்: இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (மார்ச் 09) துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை பிரதமர் மோடியுடன் இணைந்து ஜாலியாக ஆஸ்திரேலிய பிரதமர் கண்டு ரசித்தார்.

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனிஸ், இந்தியாவுக்கு 4 நாள் பயணமாக நேற்று வந்தார். அவருடன் அமைச்சர்கள் உள்பட 27 பேர் அடங்கிய பிரதிநிதிகள் குழுவும் வந்துள்ளது. ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனிஸ் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல் முறை ஆகும்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடர் சில தினங்களுக்கு முன் துவங்கியது. அதில் முதல் மூன்று டெஸ்ட் போட்டியில் இந்தியா 2 -1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (மார்ச் 09) காலை 9.30 மணிக்கு துவங்கியது.

ஆஸி., பேட்டிங்
இதில் ‛டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய டார்விஸ் ஹெட், கவாஜா ஓரளவு நல்ல துவக்கம் தந்தனர். ஹெட் 32 ரன்னிலும், லபுசேன் 3 ரன்னிலும் வெளியேறினர். கேப்டன் ஸ்மித் தன் பங்கிற்கு 38 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த ஹேண்ட்ஸ்கோம்ப் 17 ரன்னில் ஷமி பந்தில் போல்டானார். பின்னர் கவாஜா உடன் ஜோடி சேர்ந்த கிரீன் நிலைத்து நின்று ஆடினார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய கவாஜா சதம் விளாசினார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸி., அணி 4 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் எடுத்தது. கவாஜா (104 ரன்கள்), கிரீன் (49 ரன்கள்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 2 விக்., அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 1 விக்., வீழ்த்தினர். நாளை இரண்டாம் நாள் ஆட்டம் நடக்கிறது.
முன்னதாக இரு நாட்டு பிரதமர்களும் ஸ்டேடியத்தில் உள்ள ரசிகர்கள் மற்றும் இரு நாட்டு விளையாட்டு வீரர்களும் பரஸ்பரம் கை அசைத்து தங்களது மகிழ்சியை வெளிப்படுத்தினர்.
இதையடுத்து இரு நாட்டு பிரதமர்கள், இரு அணியின் கேப்டன்கள் உடன் கை கோர்த்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கிரிக்கெட்டில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 75வது ஆண்டு நல்லுறவை குறிக்கும் விதமாக இரு நாட்டு பிரதமர்களும் போட்டியை ஜாலியாக கண்டு ரசித்தனர்.