சேலம்: மண்டல விளையாட்டு போட்டியில், சேலம் மாவட்ட போலீஸ் துறையினர் தங்கம் உள்பட, 16 பதக்கங்களை
பெற்றனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள அண்ணா மைதானத்தில் மண்டலங்கள் இடையே போலீஸ் துறையினருக்கு தடகளம், விளையாட்டு போட்டிகள், கடந்த, 3 முதல், 5 வரை நடந்தன. அதில் சேலம் மாவட்ட போலீஸ் துறையை சேர்ந்த, 25க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் திறமைகளை வெளிப்படுத்தி பதக்கங்களை பெற்றனர்.
குண்டு எறிதலில், 2 தங்கம், ஒரு வெள்ளி; நீளம் தாண்டுதலில், 2 தங்கம், ஒரு வெண்கலம்; 100 மீ., ஓட்டத்தில், 2 வெள்ளி, ஒரு வெண்கலம்; 200 மீ., ஓட்டத்தில் ஒரு வெள்ளி; 400 மீ., ஓட்டத்தில் ஒரு தங்கம், வெள்ளி; 1,500 மீ., ஓட்டத்தில் ஒரு தங்கம்; சைக்கிளிங் போட்டியில் ஒரு தங்கம்; கோலுான்றி தாண்டுதலில் ஒரு வெள்ளி; கோ - கோவில் ஒரு வெண்கலம் என, 7 தங்கம் உள்பட, 16 பதக்கங்களை பெற்று அசத்தினர். வீரர், வீராங்கனைகளுக்கு நேற்று சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் பாராட்டு விழா நடந்தது.
எஸ்.பி., சிவக்குமார் தலைமை வகித்து, பதக்கம் வென்ற வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். இதில் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.