ஈரோடு: ஈரோடு, சூரம்பட்டியில் பெரும்பள்ளம் ஓடையின் குறுக்கே அணைக்கட்டு அமைந்துள்ளது. சூரம்பட்டி அணைக்கட்டில் இருந்து நஞ்சை ஊத்துக்குளி வாய்க்கால் பிரிந்து சென்று, 2,500 ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் வசதி பெறுகின்றன. கீழ்பவானி வாய்க்கால் கசிவுநீர் மூலம், அணைக்கட்டுக்கு தண்ணீர் வருகிறது. தவிர மழை நீரும், அணைக்கட்டுக்கு பல்வேறு இடங்களில் இருந்து வந்து சேரும்.
இந்த அணைக்கட்டில், 7 அடி உயரத்துக்கு மட்டுமே தண்ணீரை தேக்கி வைக்க முடியும். அங்கிருந்து மதகுகள் மூலம், நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த வாய்க்காலில் பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டு, கடைமடை வரை தண்ணீர் செல்வதில்லை. இதனால், வாய்க்கால் அடைப்புகளை சரி செய்ய வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, ஈரோடு, சென்னிமலை சாலை பகுதியில் செல்லும் நஞ்சை ஊத்துக்குளி வாய்க்கால் பகுதியில் பாலத்துக்கு அடியில் சுத்தம் செய்து, தண்ணீர் செல்ல உள்ள தடைகளை அகற்றினர்.
இதுகுறித்து, நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
நஞ்சை ஊத்துக்குளி வாய்க்கால், 25 ஆண்டுகளாக பராமரிக்கப்படவில்லை. நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த, 4 ஆண்டுக்கு முன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, துார்வாரி, பாசனத்துக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்த வாய்க்காலில் தண்ணீர் சென்ற பின், இப்பகுதி விளை நிலங்கள் மற்றும் பிற பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. சென்னிமலை சாலையில் வாய்க்கால் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. அங்கு மது குடிப்போர், காலி பாட்டில், பயன்பாட்டு பொருட்களை கொட்டி செல்கின்றனர். தவிர, அப்பகுதியினர் வீட்டில் பயனற்ற பொருட்களை இங்கு வீசி செல்கின்றனர். இதை தவிர்க்க வேண்டும்.
இவ்விடத்தை தொழிலாளர்களால் சுத்தம் செய்ய முடியவில்லை. இனி இவ்விடத்தில் குப்பை கொட்டினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் எச்சரித்தனர்.