ஈரோடு: ஈரோடு அரசு மருத்துவமனையில், ஈரோடு கேன்சர் சென்டர் சார்பில் மகளிருக்கான புற்றுநோய் மருத்துவ விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை முகாம் நடந்தது. உறைவிட மருத்துவர் கவிதா, கண்காணிப்பாளர் வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட இணை இயக்குனர் (நலப்பணிகள்) பிரேமகுமாரி பேசியதாவது:
பெண்களுக்கான புற்று நோயை ஆரம்ப நிலையில் சில அறிகுறிகள் மூலம் கண்டறியலாம். அறிகுறிகள் காணப்பட்டால், அருகே உள்ள அரசு மருத்துவமனையில் உள்ள புற்றுநோய் மருத்துவ பிரிவில் பரிசோதனை செய்து கொள்ளலாம். அவ்வாறு கண்டறியப்பட்டால், அதற்கேற்ற சிகிச்சையை தொடர்ந்து, குணமடையலாம். அல்லது மேலும் வளர்ச்சி அடையாமல் இருக்க சிகிச்சை பெறலாம், என்றார்.
ஈரோடு கேன்சர் சென்டர் இயக்குனர் டாக்டர் வேலவன், ''பெண்கள், 40 வயதுக்கு மேல் பேப், ஸ்மியர் பரிசோதனையும், மார்பக புற்றுநோய் பரிசோதனை செயது கொண்டால், ஆரம்ப நிலையிலேயே அவற்றை கண்டறிந்து குணப்படுத்தலாம். தமிழக அரசின் காப்பீடு திட்டத்தில் இந்நோய்க்கு சிகிச்சை பெறலாம்,'' என்றார். டாக்டர்கள் மலர்விழி, நவீன்குமார், நிர்மல், ராமமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.