ஈரோடு: ஈரோடு பகுதியில், 4 இடங்களில் மஞ்சள் ஏலம் நடக்கிறது. இதில், ஈரோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று வழக்கம்போல ஏலம் நடந்தது. கடந்த சில நாட்களாக புதிய மஞ்சளுக்கு விலை சற்று அதிகமாக காணப்பட்டது. ஆனால், நேற்று நடந்த ஏலத்தில் புதிய மஞ்சள் குவிண்டாலுக்கு, 1,000 ரூபாய் குறைந்து காணப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள், 'மஞ்சள் விலை மிகவும் குறைவாக நிர்ணயம் செய்யப்படுவதாகவும், விலையை அதிகரித்து நிர்ணயிக்க வேண்டும்' என கோரி, கருங்கல்பாளையம், காவிரி சாலையில் சொசைட்டி முன், 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர். கருங்கல்பாளையம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது விவசாயிகள் தரப்பில், 'கடந்தாண்டு புதிய மஞ்சள் வந்தபோது ஒரு குவிண்டால், 8,000 ரூபாய்க்கு மேல் விலை போனது. இந்தாண்டு, 6,000 ரூபாய்க்கு மட்டுமே எடுக்கின்றனர். எனவே விலையை அதிகரித்து நிர்ணயிக்க வேண்டும்' என்றனர். 'கூட்டுறவு சங்க உயர் அதிகாரிகளிடம் பேசி, உங்கள் பிரச்னைக்கு தீர்வு காணுங்கள்', என போலீசார் கூறியதை தொடர்ந்து, விவசாயிகள் மறியலை கைவிட்டனர்.
சொசைட்டி அதிகாரிகள் கூறுகையில், 'கடந்தாண்டு புதிய மஞ்சளுக்கு விலை அதிகமாக இருந்தது. இந்தாண்டும் ஆரம்பத்தில் விலை உயர்ந்தது. இந்தாண்டு, 30 சதவீதத்துக்கு மேல் விளைச்சல் அதிகம் உள்ளதால், வரத்து அதிகரித்தது. இதனால், விலை சரிந்தது' என்றனர்.