ஓசூர்: ஓசூரில் நடந்த சந்திரசூடேஸ்வரர் கோவிலில் தேரோட்டத்தின்போது, பக்தர்கள் கூட்டத்தை போலீசாரால் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. ஏராளமான பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில் தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அவர்களை கட்டுப்படுத்த, ஏ.டி.எஸ்.பி., விவேகானந்தன், ஓசூர் டி.எஸ்.பி., பாபு பிரசாந்த், இன்ஸ்பெக்டர்கள் உட்பட, 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பக்தர்களை ஆர்.வி., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள சாலையில் வந்து, தேரோட்டத்தில் சுவாமி தரிசனம் செய்து விட்டு, தேர்ப்பேட்டை பச்சைகுளம் வழியாக வெளியே செல்ல, போலீசார் ஏற்பாடு செய்திருந்தனர்.
ஆனால், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றதால், போலீசாரால் அதை சரியான முறையில் நடைமுறைப்படுத்த முடியவில்லை. ஆர்.வி., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள சாலையிலும் பக்தர்கள் கூட்டம் கடுமையாக இருந்தது. வழக்கமாக, தேரோட்டத்தின்போது தேரின் இருபுறமும் உள்ள சங்கிலிக்கு நடுவே இடம் காலியாக இருக்கும். ஆனால், நேற்று முன்தினம் சங்கிலிக்கு நடுவேயும் பக்தர்கள் குவிந்தனர். அதனால், மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் தேரோட்டத்தை துவக்கி வைத்து விட்டு, வெளியேற முடியாமல் தவித்தனர்.
கண்காணிப்பு இல்லை
பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் சோர்ந்துபோயினர். பக்தர்களின் நகை மற்றும் பணம் திருட்டு போவதை தடுக்கவும், கண்காணிக்கவும், 100க்கும் மேற்பட்ட, 'சிசிடிவி' கேமராக்கள் அமைக்கப்பட்டிருந்தன. அதையும் மீறி, 25க்கும் மேற்பட்ட பெண்களிடம் நகை திருட்டு போனதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது பற்றி கூறாமல், டவுன் போலீசார் மவுனம் சாதிக்கின்றனர். உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளாத காரணத்தால் தான், நகை பறிப்பு சம்பவம் நடந்துள்ளதாக பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஓசூர், டவுன் இன்ஸ்பெக்டர் சிவக்குமாரிடம், நகை பறிப்பு குறித்து கேட்டபோது, ''தேரோட்ட நாளன்று நான் ஐகோர்ட் சென்று விட்டேன். இன்று (நேற்று)தான் ஸ்டேஷனுக்கே
வந்துள்ளேன்,'' என்றார்.