அன்றே பிறந்த எக்கு
வெங்கல யுகத்தின் இறுதியிலேயே, ஐரோப்பாவில் எக்கு இரும்பு அறிமுகமானதாக, 'ஜர்னல் ஆப் ஆர்கியாலாஜிக்கல் சயன்சஸ்' இதழின் ஆராய்ச்சிக் கட்டுரை தெரிவிக்கிறது. ஐபீரிய தீபகர்ப்பத்தில், 2900 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு கிடைத்துள்ளது.
அதில் செதுக்கப்பட்டுள்ள மிக மிக நுட்பமான வேலைப்பாடுகளை எக்கு உளியால் தான் செய்திருக்க முடியம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அதே காலத்தைச் சேர்ந்த எக்கு உளியையும் போர்ச்சுகலில் தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எனவே ஐரோப்பாவில் 2900ம் ஆண்டுகளிலேயே எக்கு பயன்பாட்டுக்கு வந்துள்ளது உறுதியானது.
கார்பனை கணக்கிடும் கோள்
அமெரிக்காவின், 'நாசா' அமைப்பு 2014ல், புவியைச் சுற்றும் கார்பன் கண்காணிப்பகம் என்ற செயற்கைக்கோளை ஏவியது. சி.சி.ஓ-., 2 அனுப்பிய தரவுகளை அலசிய 60 ஆராய்ச்சியாளர்கள் கொண்ட சர்வதேசக் குழு, தங்கள் முடிவுகளை 'எர்த் சிஸ்டம் சயன்ஸ் டேட்டா' இதழில் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, 2015 முதல் 2020 வரை, 100 நாடுகள் வெளியேற்றிய கரியமில வாயுவின் அளவையும் காட்டு தாவரங்கள், தரை நுண்ணுயிரிகள் போன்றவை வளிமண்டலத்திலிருந்து மீண்டும் உறிஞ்சிய கார்பனின் அளவையும் கணக்கிட்டுள்ளனர்.
அணுவை படமெடுத்த அதிவேக கேமரா!
பொருட்களுக்குள் இருக்கும் அணுக்கள், கட்டுக்கோப்பாக இயங்குவதாக விஞ்ஞானிகள் கருதினர். அணுக்கள் மட்டத்தில் நிகழும் இயக்கத்தை படம் பிடித்தபோது, எல்லா அணுக்களும் சீராக இயங்குவதாகவே தெரிந்தது. ஆனால், வழக்கமான கேமராவைவிட ஒரு ட்ரில்லியன் மடங்கு வேகத்தில் திறந்து மூடும் 'நியூட்ரான் கேமரா' என்ற புதிய கருவி மூலம் படம் பிடித்தபோது, அணுக்கள் ஒழுங்கின்றி இயங்குவதை விஞ்ஞானிகள் படம்பிடித்தனர். இக்கேமராவை அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் பிரான்சிலுள்ள பர்கண்டி பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
மட்கும் உறிஞ்சு குழல்
மாசு ஏற்படுத்தும் குப்பையில் 'ஸ்ட்ரா' எனப்படும் உறிஞ்சு குழல்களின் பங்கு கணிசம். பலரும் துாக்கிப் போடும் பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்களை பல நாடுகளில் தடை செய்துள்ளனர். இதனால், எளிதில் மட்கும், பிளாஸ்டிக் அல்லாத உறிஞ்சு குழல்கள் வந்துள்ளன.
ஆனால், அவற்றில் பல குறைகள் இருக்கின்றன. இதற்கு மாற்றாக, தாவரங்களில் இருக்கும் 'லிக்னின்' என்ற பொருளில் தயாரித்த குழலை, தென்கொரியாவின் இன்ஹா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இது உறுதியாக இருந்தாலும், பயன்படுத்திய பின் வேகமாக மட்கிவிடும்.
மறுசுழற்சிக்கு வரும் சூரிய பலகைகள்
வெள்ளி, செம்பு, சிலிக்கன் படிகங்கள், அலுமினியம் போன்ற மதிப்புள்ள பொருட்கள் இருந்தும், 90 சதவீத சூரிய ஒளி மின் பலகைகள் மறுசுழற்சிக்கே வருவதில்லை. வீடுகள், ஆலைகளின் கூரைகளில் சூரிய மின் பலகைகள் பொருத்தப்படுவது அதிகரித்தது 1990களில் தான்.
அவற்றின் மின் உற்பத்தி திறன், கடந்த 25 ஆண்டுகளில் குறைந்துவிட்டதால், அவை மறுசுழற்சிக்கு தயாராகி வருகின்றன. வரும் 2050ல் சூரிய மின் பலகை மறுசுழற்சி தொழிலின் மதிப்பு, 15 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டிவிடும்.