வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
புதுடில்லி: மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக, என்னை விசாரிக்க அமலாக்கத்துறை அவசரப்படுகிறது என தெலுங்கானா முதல்வர் மகள் கவிதா கூறியுள்ளார்.

புதுடில்லியில் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இது தொடர்பாக டில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு, திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு, இன்று(மார்ச் 09) நேரில் ஆஜராகும்படி, தெலுங்கானா முதல்வரின் மகள் கவிதாவுக்கு, அமலாக்கத் துறை, 'சம்மன்' அனுப்பியிருந்தது.
இதையடுத்து, விரைவில் அவர் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து தெலுங்கானா முதல்வரின் மகள் கவிதா கால அவகாசம் கோரி, அமலாக்கத்துறையிடம் கோரிக்கை விடுத்தார். இதை அமலாக்கத்துறை ஏற்று கொண்டது.

இந்நிலையில் தெலுங்கானா முதல்வரின் மகள் கவிதா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ஒரு பெண்ணை விசாரிக்க வேண்டுமானால், அவளுடைய வீட்டில் உரிய அனுமதியுடன் விசாரிக்க வேண்டும். விசாரணைக்கு, இன்று(மார்ச் 09) நேரில் ஆஜராகும்படி, அமலாக்கத் துறை, 'சம்மன்' அனுப்பியிருந்தது. இதையடுத்து மார்ச் 11ம் தேதி என் வீட்டிற்கு விசாரணைக்கு வரலாம் என்று அமலாக்கத்துறையிடம் கேட்டுக் கொண்டேன். ஆனால் அவர்கள் நேரில் ஆஜராக வேண்டும் எனக் கூறினார்கள்.
மார்ச் 16ம் தேதிக்கு நேரில் ஆஜராக அனுமதி கோரினேன். ஆனால் என்னை விசாரிக்க அமலாக்கத்துறை அவசரப்படுகிறது. இதற்கு பின்னால் இருக்கும் காரணம் எதுவும் தெரியவில்லை. அதனால் மார்ச் 11ம் தேதிக்கு ஒப்புக்கொண்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement