பொன்னேரி:மீஞ்சூர் வட்டாரத்தில், சம்பா பருவத்திற்கு பின்பு, பச்சைப்பயறு பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். குறைந்த முதலீட்டில், எதிர்பார்க்கும் வருவாய் கிடைக்கும் என்பதால் இவை பயிரிடப்படுகிறது.
இந்த ஆண்டு, 10,750 ஏக்கர் பச்சைப்பயறு பயிரிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை, 8,800 ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டு உள்ளது.
கடந்த ஜனவரி மாதத்தில் பயிரிடப்பட்ட விளைநிலங்களில், பச்சைப்பயறு செடிகள் வளர்ந்து, அடுத்த சில தினங்களில் அறுவடைக்கு தயாராகி வருகின்றன.
ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் வாயிலாக விவசாயிகளிடம் இருந்து, பச்சைப்பயறு கொள்முதல் செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு, ஒரு கிலோ, 71.96 ரூபாய்க்கு விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்டது. ஒரு ஏக்கருக்கு, 113 கிலோ மட்டுமே என அளவு நிர்ணயிக்கப்பட்டது.
இந்த ஆண்டு, ஒரு கிலோ, 77 ரூபாய் எனவும், ஒரு ஏக்கருக்கு, 113 கிலோ எனவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், ஒரு ஏக்கருக்கு, 113 கிலோ கொள்முதல் என்பதை, 250 கிலோவாக அதிகரிக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
இது தொடர்பாக, பொன்னேரி உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தினர் தெரிவித்ததாவது:
அரசு கொள்முதல் நிலையத்தில், ஒரு ஏக்கருக்கு, 113 கிலோ மட்டுமே பெறுகின்றனர். விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு, 450 - - 700 கிலோ வரை மகசூல் பெறுகின்றனர்.
கொள்முதல் அளவை அதிகரிக்க வேண்டும். இல்லையெனில் இடைத்தரகர்களின் ஆதிக்கத்தால் விலைவீழ்ச்சி ஏற்படும். விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படும்.
இந்நிலை தொடர்ந்தால், விவசாயிகள் பச்சைப்பயறு பயிரிடுவதில் ஆர்வம் குறையும்.
பச்சைப்பயறு கொள்முதல் அளவை அதிகரிக்க வேண்டும். மேலும், மே மாதம் இறுதிவரை கொள்முதல் செய்வதற்கான கால அளவையும் நீட்டிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளனர்.